×

தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆரோக்கிய சேது செயலியில் 6 மாதங்களுக்கு மேல் தகவல்களை வைத்திருக்க தடை...மத்திய அரசு தகவல்

டெல்லி: உலகம் முழுவதும் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு மே 17-ம் தேதிக்கு பின்னரும் நீட்டிக்கப்படும் என நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, முக்கியமாக, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க,  நிச்சயமாக ‘ஆரோக்யா சேது’ மொபைல் ஆப்பை பதிவிறக்கவும். இந்த பயன்பாட்டைப் பதிவிறக்க மற்றவர்களை ஊக்குவிக்கவும் என்றார்.

கொரோனா உள்ளவர்களையும், அவர்களின் தொடர்புகளையும் கண்டறிய உதவும் ஆரோக்கிய சேது என்கிற செல்பேசிச் செயலியைத் தேசியத் தகவல் மையம் உருவாக்கியுள்ளது. இந்த செயலியை அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆரோக்கிய சேது செயலி பதிவிறக்கம் செய்தோர் எண்ணிக்கை 10 கோடியை நெருங்கியுள்ளது. இந்த செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வதன் மூலம், கொரோனா ஹாட்ஸ்பாட்கள் குறித்த விவரம், பொது இடங்களில் நோய்தொற்றுள்ள நபர்களை எதிர்கொண்டால் எச்சரிப்பது, தனிநபருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளதாக என தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் சாவ்னே, ஆரோக்கிய சேது செயலியை இதுவரை 9.8 கோடி மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலியை பயன்படுத்தி சுமார் 13,000 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மக்களின் அந்தரங்க தகவல்கள் பாதுகாக்கப்படுவது முக்கியம். தனிநபரின் அந்தரங்க தகவல்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதன்படி, பயனாளர்களின் இருப்பிட தகவலானது தனிமைப்படுத்துதல் மற்றும் குடிமக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பாதிக்கப்படாத நபர்கள் தங்களைப் பற்றிய தகவலை செயலியில் இருந்து 30 நாட்களில் நீக்க முடியும். பரிசோதனை செய்யப்பட்டவர்கள் 45 நாட்களிலும், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் 60 நாட்களிலும் தங்களைப் பற்றிய தகவலை இந்த செயலியின் பதிவிலிருந்து நீக்கி விடலாம். மேலும், 6 மாதங்களுக்கு மேல் இந்த செயலியில் தகவல்களை வைத்திருக்க தடை விதிக்கப்படுகிறது. ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் பிரிவு 51 முதல் 60 வரை மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.


Tags : Government , Action for misuse: Prohibition of keeping information in the Wellness Sets processor for more than 6 months ... Federal Government Information
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...