×

ஊரடங்கை சரியாக அமல்படுத்தாத இடங்களில் பிரச்னைகள் அதிகரிப்பு: முதல்வர்களிடம் பிரதமர் மோடி கவலை

புதுடெல்லி: ‘சமூக இடைவெளியை பின்பற்றாத இடங்களிலும், ஊரடங்கை சரியாக பின்பற்றப்படாத இடங்களிலும் கொரோனா பரவல் பிரச்னைகள் அதிகரித்துள்ளன,’’ என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகின்றது. மூன்று முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகின்ற 17ம் தேதி முடிவுக்கு வருகின்றது.  இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலமாக கலந்துரையாடினார். அந்தந்த மாநிலத்தில் உள்ள கொரோனா நிலவரங்கள், நோய் தொற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள பிரத்யேக நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இந்த கலந்துரையாடலின்போது பிரதமர் மோடி பேசியதாவது: கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்தியதில் மாநிலங்கள் வகித்த பங்கு பாராட்டுக்குரியது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா வெற்றிகரமாக கையாண்டதாக உலக நாடுகள் கருதுகின்றன. கொரோனாவுக்கு எதிரான இந்த பாதையில் முன்னோக்கி செல்வதற்கு சவால்களை எதிர்கொள்வதற்கு சமநிலையான திட்டங்களை பின்பற்றுவது அவசியமாகும். எந்த பாதையில் செல்லலாம், எந்த வழியை பின்பற்றலாம் என்பது குறித்து மாநிலங்கள் செய்யும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்க முடியும்.

எங்கெல்லாம் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லையோ அல்லது ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதில் குறைபாடு ஏற்பட்டதோ அங்கெல்லாம் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. ஊரடங்கின்போது மக்கள் வீடுகளிலேயே இருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த முயற்சிகளை மேற்கொள்வது அவசியமாகும். எனினும், இதுபோன்ற நேரத்தில் மக்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல விரும்புகின்றனர். எனவே, முடிவுகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.  கிராமங்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பது என்பது நாட்டின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Modi ,CMs , Curfew, Chief Ministers, Prime Minister Modi, Corona
× RELATED சொல்லிட்டாங்க…