×

துக்க நிகழ்ச்சி, மருத்துவ அவசர தேவைகளுக்கு 30 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 1 மணி நேரத்தில் பாஸ் வழங்கப்படுகிறது: ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

சென்னை: அரசு தரப்பின் விரிவான விளக்கத்தை ஏற்று அவசர பாஸ் வழக்கு ஐகோர்ட்டில் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருமணம், மருத்துவம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக வெளியூர் செல்பவர்களுக்கு அவசர பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த அனுமதிச் சீட்டுகள்  மின்னணு முறையில் வழங்கப்படுகிறது. அதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் போது, அனுமதிச் சீட்டுக்கள் தாமதமாகிறது. இதுகுறித்து ராம்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதில், ‘மருத்துவம் மற்றும் மரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கோரி அளிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது ஒரு மணி நேரத்தில் முடிவெடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். இந்த அனுமதி சீட்டுகளை  24 மணி நேரமும் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்தியநாராயணா அமர்வு, 24 மணிநேரமும் பாஸ் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கலாமே.

ஒருவர் பாஸ் பெற 2 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றால் எமர்ஜென்சி என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்கள். இதுதொடர்பாக அரசு இன்றைக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில் 30 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 1 மணி நேரத்தில் அவசர பாஸ் வழங்கப்படுகிறது. அவசர தேவைகளுக்கான கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நேற்றுவரை 3,61,433 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 3,48,210 விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 13,222 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளது. சந்தேக தன்மையுடைய விண்ணப்பங்கள் மட்டுமே நிலுவையில் வைக்கப்படுகிறது என ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.


Tags : Government ,Boss ,Icort ,Tamil Nadu ,Medical Emergency , Mourning, Medical Emergency, Boss, Icort, Tamil Nadu Government
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை