×

சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்புள்ள வீடு மட்டுமே இனி முடக்கப்படும்: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் கொரோனா பாதிப்புள்ள வீடுமட்டுமே இனி முடக்கப்படும், என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  சென்னையில் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் நேற்று ராயபுரம் மண்டல அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 170 வார்டுகள் 10க்கும் குறைவான நோய் தொற்று உள்ள பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் போலீசார் ரோந்து செல்லும்போது 30 சதவீதம் மக்கள் முகக்கவசம் அணியாமல் அலட்சியமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

பொதுமக்கள் உள்ளாடை அணிவதை போல், முகக்கவசம் அணிவதையும் கட்டாயமாக்க வேண்டும். சென்னையில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு உதவி செய்ய சில தொண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. முன்பு, சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதித்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது, மக்களின் கோரிக்கையை ஏற்று, கொரோனா பாதிப்பு கண்டறியப்படும் வீடு மட்டும் இனி முடக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து 400க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில், ‘‘கொரோனா தொற்று எங்கிருந்து வேண்டுமானாலும் பரவலாம் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்படும் வார்டுகளில் சிகிச்சைக்கு பணம் கேட்பதாக கூறப்படுவது பொய்யான தகவல். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, நோய் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்,’’ என்றார்.


Tags : Radhakrishnan ,houses ,Chennai ,corporation ,Corona , Madras Corporation, Corona, Special Officer Radhakrishnan
× RELATED கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து...