×

திருப்புவனத்தில் பலத்த மழை: சூறைக்காற்றால் வாழை மரங்கள் சாய்ந்தன

திருப்புவனம்: திருப்புவனம் பகுதியில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பலத்த சூறைக்காற்று வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. சூறைக்காற்றால் 300க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. திருப்புவனம் புதூர் நான்குவழிச்சாலை அருகே உள்ள வாழை தோட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழைத்தாருடன் மரங்கள் சாய்ந்ததால் மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வாழைக்கான இன்ஷூரன்ஸ் கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து திருப்புவனம் புதூர் விவசாயி செல்வம் கூறுகையில், ‘இரண்டு ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்திருக்கிறேன்.

வாழைக்காய் விட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் கொரோனா ஊரடங்கால் வாழையிலையை அறுக்க முடியவில்லை. வாழைக்காய் தாரையும் அறுத்து விற்க முடியவில்லை. அதனால் மரத்திலேயே விட்டு விட்டோம். வாழைத்தார் முழுவதும் வீணாகிப் போனது. வாழை இலைகளை அறுத்து கால்நடைகளுக்கு தீவனமாக போட்டு விட்டோம். இரண்டு மூன்று லட்சம் செலவு செய்து அறுவடை சமயத்தில் இப்போது கொரோனா ஊரடங்காலும் சூறைக்காற்றாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறோம். கொரோனாவால் அறுவடை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட வாழைக்கு பயிர் காப்பீடு செய்திருந்தும் இழப்பீடு தர முடியாது என மறுக்கின்றனர்.

நேற்று முன்தினம் பலத்த சூறைக்காற்று வீசியதால் சுமார் 300 வாழை மரங்கள் வாழைக்காய்களுடன் சாய்ந்து வீணாகிப் போனது. பயிர் இன்சூரன்ஸ் செய்யப்பட்டதால் இதற்கான் இழப்பீடாவது கிடைக்குமா என்று கவலையில் இருக்கிறேன். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் எல்லோரும் பார்வையிட்டு சென்றனர். மாவட்ட நிர்வாகம் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Thiruvananthapuram ,Thirupavanam , Thirupavanam, heavy rain, banana trees, leaning
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!