×

வட மாநில தொழிலாளர்கள் வெளியேறுவதால் ஆட்கள் பற்றாக்குறை தொழில் நிறுவனங்கள் மீண்டும் முடங்கும்: அபாயத்தை தடுக்க கோரிக்கை

கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதால் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு தொழில் துறையில் கோவை முன்னேறுமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 4ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டது. ஊரடங்கினை கடைபிடித்து பல தொழில் நிறுவனங்கள் இயங்க கடந்த 6ம் தேதி முதல் அனுமதித்து முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது. கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், பவர்லூம், வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீதம் தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுகின்றன. இதில் கிராமப்புறங்களை சுற்றி  சுமார் 325 பெரிய தொழில் நிறுவனங்களும், மாநகராட்சிப் பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும்  உள்ளன. இந்த தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களில் 40 சதவிகித தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளர்கள் ஆவார்கள். அதாவது சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கோவை மாவட்டத்தில் உள்ளனர். தொழில் நிறுவனங்கள் தற்போது 50 சதவிகித பணியாளர்களை கொண்டோ அல்லது குறைந்தபட்சம் 20 நபர்களை கொண்டோ செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. கிராமப்புறங்களில் உள்ள ஒருங்கிணைந்த நூற்பாலைகள் ஷிப்ட் முறையில் தக்க சமூக இடைவெளியுடன் 50 சதவிகித பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்கினாலும் வடமாநில தொழிலாளர்கள் பலர் மாநகராட்சி பகுதிகளில் தங்கியுள்ளதால் அவர்களால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மாநகராட்சி பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்பட்டால்தான் அவர்களில் பெரும்பாலோனோர் பணிக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனவே வடமாநில தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சொந்த ஊர் செல்ல முடிவு எடுத்தனர்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவர்கள் தங்களை சொந்த ஊர் செல்ல அனுமதிக்க கோரியும், அதற்காக ரயில் விடக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு நேற்று முன்தினம் கோவையில் இருந்து பீகாருக்கு தனி ரயில் இயக்கப்பட்டது. நேற்று காலை பீகாருக்கு ஒரு ரயிலும், மாலையில் உத்தரபிரதேசத்துக்கு ஒரு ரயிலும், இரவில் ஒரு ரயிலும் இயக்கப்பட்டது. அதில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர். இவ்வாறு கோவையில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் வெளியேறுவது தொழில்துறையினர் இடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறுகையில், ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் பல்வேறு வருவாய்களை இழந்து, தொழில் துறையினர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்குக்கு பின் மீண்டும் தொழிலை புதிதாகத்தான் துவங்கும் நிலை உள்ளது. தற்போது வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வது மிகப்பெரிய அதிர்ச்சியளிக்கிறது.

அதன் தாக்கம் குறைந்தது 6 மாத காலமாவது தொழில்துறையில் இருக்கும். வடமாநில தொழிலாளர்களுக்கு பதிலாக தென்மாவட்டங்களில் இருந்து மக்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கி வேலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். ஆனால் அதற்கு குறைந்தது 3 மாதம் ஆகும். மீண்டும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தொழிலை துவங்கும் இந்நேரத்தில் இது போன்று ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அது தொழில் நிறுவனங்களை மீண்டும் முடக்கி விடும் என்றார்.தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறுகையில்:தொழில் நிறுவனங்கள் செயல்படாத இந்நேரத்திலும் கூட வடமாநில தொழிலாளர்களை தங்க வைத்து அவர்களுக்கு உணவு வழங்கி, சம்பளம் கொடுத்து, செலவுக்கு முன் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதனால் சிறு குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் இதனால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை சந்திக்கும். 20 நபர்களை கொண்டு செயல்படும் நிறுவனத்தில் கூட வடமாநில தொழிலாளர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிவார்கள். அப்படிபட்ட நிறுவனங்கள் இயங்க முடியாத சூழ்நிலைக்கூட உருவாகும். மாநகராட்சி பகுதிகளில் தொழில் நிறுவனங்களை இயங்க அனுமதித்தால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதை தடுத்து நிறுத்த முடியும், என்றார்.

சமூக ஆர்வலர் வெள்ளியங்கிரி கூறுகையில்: வடமாநில தொழிலாளர்களுக்கு போதிய வசதிகளை செய்ய தவறியதே அவர்கள் சொந்த ஊர் செல்ல முடிவு எடுத்ததற்கு முக்கிய காரணம். ஊரடங்குக்கு பின்னாவது தொழிலை துவங்கலாம் என்றால் தற்போது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து மான்செஸ்டர் நகரத்தை காக்க வேண்டும் என்றார். வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதை தடுத்து ஆட்கள் பற்றாக்குறை ஏற்படாமல் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் செயல்பட்டு மான்செஸ்டர் நகரமாகவும், தொழில் நகரமாகவும் விளங்கும் கோவை தொழில் துறையில் முன்னேறுமா? என்பது தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.

Tags : state workers ,enterprises , scarcity,Northern State workers,Businesses ,freezing again, prevent risk
× RELATED ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை,...