×

மாவட்டத்தில் அணைகள், கண்மாய்கள் வறண்டன கொளுத்தும் கோடையால் குடிநீர் தட்டுப்பாடு: முதல்வர் துவக்கிய திட்டத்தில் உடைப்புகளால் தண்ணீரில்லை

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டத்தில் அணைகள், கண்மாய்கள் அனைத்து வறண்ட நிலையில் நிலத்தடி நீர் மட்டமும் சரிந்து, நகரங்கள், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 71 நாட்களுக்கு முன் முதல்வர் துவக்கிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உடைப்புகளால் பல ஊராட்சிகளுக்கு தண்ணீர் போய் சேரவில்லை. விருதுநகர் மாவட்டத்தின் சராசரி மழையளவு 820.1 மி.மீ, கடந்த 20 ஆண்டுகளில் 2005, 2006, 2008, 2015, 2020 ஆகிய 5 ஆண்டுகளில் மட்டும் சராசரியை விட கூடுதலாக மழை பதிவாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு 2016ல் 393மி.மீ, 2017ல் 811மி.மீ, 2018ல் 797 மி.மீ மழை பதிவாகி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு துவங்கி 2018ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் தொடர்ந்து குறைவாக மழை பெய்த நிலையில் 2019ல் 837.94 மி.மீ மழை பெய்தும் கடந்த ஆண்டு அணைகள், கண்மாய்களுக்கு முழுமையான தண்ணீர் வரத்து இல்லை. அத்துடன் கண்மாய்களுக்கு நீர் வரத்து பாதைகள் ஆக்கிரமிப்பு, வரத்து கால்வாய்களை மறைந்து குழிகள் தோண்டி சரளை மண் அள்ளியது, கண்மாய் உட்பகுதியில் மண் அள்ளி கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தாலும் வெளியேற வழியின்றி செய்தது உள்ளிட்ட காரணங்களால் 90 சதவீத கண்மாய்கள் கடந்த ஆண்டு நீரின்றி போனது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு ஜன. முதல் ஏப். வரை பெய்ய வேண்டிய 139.1 மி.மீ மழையில் ஒரு மி.மீ கூட மழை பதிவாக வில்லை. கடந்த ஆண்டு முதல் மழைநீர் வரத்து இல்லாததால்  மாவட்டத்தில் உள்ள 8 அணைகள், 1024 கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. மாவட்டத்தில் ஓடுகின்ற நீர் ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் கண்மாய்களை ஓட்டிய பகுதியில் போடப்பட்ட போர்வெல்களில் இருந்து கொண்டு வரப்படும் தண்ணீரை கொண்டே நகரங்கள், கிராமங்களின் குடிநீர் உள்பட அனைத்து தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்றை மையாக வைத்து 7 தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வந்தாலும் தேவைக்கான தண்ணீர் வருவதில்லை. இதனால் நகராட்சிகள் ஊராட்சிகள், பேரூராட்சிகளில் 10 முதல் 15  நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சாத்தூர், சிவகாசி, விருதுநகர், வெம்பகோட்டை உள்ளிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமங்களுக்கான 9 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் முடிந்ததாக மார்ச் 1ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

அந்த திட்டம் துவங்கி வைத்து 71 நாட்களாகியும் ரோசல்பட்டி, சிவஞானபுரம், பாவாலி உள்பட பல கிராம ஊராட்சிகளுக்கு உடைப்புகள் காரணமாக தண்ணீர் போய் சேரவில்லை. இதனால் கிராம ஊராட்சிகளில் நிலத்தடி நீர் மூலம் கிடைக்கும் தண்ணீரை வைத்து குடிநீர் விநியோகம் செய்து வருகின்றன. தற்போது நிலத்தடி நீர் மட்டமும் வேகமாக குறைந்து வருவதால் ஊராட்சிகளில் 30 முதல் 45 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விநியோகம் செய்கின்றன.விருதுநகர் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில், தமிழக முதல்வர் துவக்கி வைத்த தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஊராட்சிகளுக்கு தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் மாதங்களில் ஊராட்சிகளின் குடிநீர் என்பது கேள்விக்குறியாகும் என்பதில் ஐயமில்லை. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் முடிந்ததாக மார்ச் 1ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அந்த திட்டம் துவங்கி வைத்து 71 நாட்களாகியும் ரோசல்பட்டி, சிவஞானபுரம், பாவாலி உள்பட பல கிராம ஊராட்சிகளுக்கு உடைப்புகள் காரணமாக தண்ணீர் போய் சேரவில்லை

Tags : district ,CM ,Droughts , Dams ,droughts, district
× RELATED சென்னையில் 6 செ.மீ. மழை பதிவு