×

தாவரவியல் பூங்கா காட்சி மாடத்தில் 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம்: ஊரடங்கால் கண்டு மகிழ ஆளில்லை

ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மாடங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் இவற்றை கண்டு மகிழ ஆளில்லாத நிலையே நீடிக்கிறது. சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த போதிலும், கோடை  காலமான ஏப்ரல் மற்றும் மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் மே மாதத்தில், மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி மற்றும் வாசனை திரவிய கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகிறது.

இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவது வழக்கம். குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காணவே பல லட்சம்  சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். இதற்காக பூங்காவை தோட்டக்கலைத்துறையினர் தயார் செய்து, அதில் பல லட்சம் மலர்கள் பூக்கும் வகையில் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த ஆண்டும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக கடந்த டிசம்பர் மாதம் முதல் நாற்று நடவு பணிகள் துவக்கப்பட்டது. தற்போது பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகளில் பல வகையான வண்ண மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.

இன்கா மேரி கோல்டு, பிரஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயான்தஸ், பிகோனியா, டேலியா, பால்சம், ரெனன்குலஸ்,  வயோலா, அஜிரேட்டம், கேலண்டுலா, கிளாடியோலஸ், லில்லியம், சூரியகாந்தி,  சப்னேரியா என பல வகையான மலர்கள் பூத்துள்ளது. 35 ஆயிரம் தொட்டிகள் மலர்  காட்சி மாடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. இது தவிர பூங்கா பெர்னஸ்  புல் மைதானத்தில் கொரோனா வைரஸ் வடிவில் 5 ஆயிரம் மலர் தொட்டிகளை கொண்டு  மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், பச்சை கம்பளம் விரித்தார்  போல், பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களும் காட்சியளிக்கிறது.

ஆனால்,  ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், வழக்கம் போல், அனைத்து அலங்கார பணிகளையும் தோட்டக்கலைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். வெயிலில் மலர்கள் வாடாமல் இருக்க நாள் தோறும் தண்ணீர்  பாய்ச்சும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இம்மாதம் 17ம் தேதியுடன்  ஊரடங்கு வாபஸ் பெற்று, சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டால், இந்த மலர்  அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசிக்க  வாய்ப்புள்ளது.



Tags : Botanical Gardens Display Floor: No Surprise Botanical Gardens Display Floor , Botanical Garden, Flower Decoration
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...