×

சினிமா துளிகள்

1) பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா நடிக்கும் படத்துக்கு பெயர் முடிவாகவில்லை. இப்படத்துக்காக வீட்டில் இருந்தபடியே கபிலன் எழுதிய ஒரு பாடலை இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார், பா.ரஞ்சித். அது கதைக்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால், உடனே ஓ.கே ஆகிவிட்டது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் உருவாக்கப்பட்ட பாடல் இது.
 2) விஜய்யின் மாஸ்டர் படத்தில் எதிர்மறை நாயகனாக நடித்துள்ள விஜய் சேதுபதியின் கைவசம் பல படங்கள் இருக்கிறது. இடம் பொருள் ஏவல், மாமனிதன், லாபம், க/பெ ரணசிங்கம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல், தெலுங்கில் புஷ்பா, இந்தியில் லால் சிங் சதா என்று, பட்டியல் நீள்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜனகராஜ் நடிக்கும் ஒபாமா என்ற படத்தில், அவர் கேட்டுக்கொண்டதற்காக சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
3) இரத்தம் ரணம் ரௌத்திரம் என்ற படத்தை இயக்கும் எஸ்.எஸ்.ராஜமவுலி, அடுத்து மகாபாரதம் கதையை படமாக்க முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் குறித்து கூறுகையில், “மகாபாரதத்தை படமாக்க வேண்டும் என்ற ஆர்வம் மற்றவர்களை விட எனக்கு அதிகமாக இருக்கிறது என்றாலும், கொரோனா ஊரடங்கு நேரத்தில் அதற்கான பணிகள் தொடங்குவது என்பது சுலபமான விஷயம் இல்லை. மற்ற படங்களை விட இதற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டும். என்றாலும், மகாபாரதம் படம்தான் என் லட்சியப் படம். நான் சினிமா துறையை விட்டு விலகுவதற்குள், மகாபாரதம் படத்தை உருவாக்கி விடுவேன் என்று நம்புகிறேன்” என்றார்.  
4) ஊரடங்கு காரணமாக தனது பிறந்தநாள் கேக்கை வீட்டிலேயே தயாரித்தார், ஐஸ்வர்யா மேனன். பிறகு சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களுடன் உரையாடிய அவர், சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படித்ததை நினைவுகூர்ந்தார். மேலும், பத்தாம் வகுப்பு படிக்கும்போது தனக்கு ஏற்பட்ட காதல் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். ஆனால், தற்போது யாரையும் காதலிக்கவில்லை என்றும் சொன்னார்.
 5) சொந்தப் பணிகள் காரணமாக தற்காலிகமாக டிவிட்டரை விட்டு வெளியேறி இருந்த விவேக், தற்போது மீண்டும் அதில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர், “நண்பர்கள் மற்றும் ரசிகர்களே. நான் திரும்ப வந்துட்டேன்” என்று ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், டிவிட்டர் தளத்தில் காமெடி நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு, செந்தில் ஆகியோரது பெயர்களில் போலி கணக்குகள் இயங்குவதாக சம்பந்தப்பட்டவர்கள் அறிவித்துள்ளனர்.
 6) தமிழில் சிவா இயக்கத்தில் அஜித் குமார், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும், மலையாளத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லுசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் சிரஞ்சீவி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வரும் அவரது ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
 7) விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன், பிரனீதா நடிப்பில் வெளியான படம், 24. தற்போது இப்படத்தின் 2ம் பாகத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விக்ரம் கே.குமார், அதற்கான கதையை எழுதி வருகிறார். “முதல் பாகத்தை விட சிறப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே கால்ஷீட் கொடுப்பேன்” என்று கறாராக சொல்லிவிட்டாராம் சூர்யா.  
8)  மலையாளத்தில் உருவாகும் ஜீவிதம் என்ற படத்துக்கான படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் நடந்தபோது, கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. உலகம் முழுவதும் போக்குவரத்து முடக்கப்பட்டதால், கடந்த இரண்டு மாதங்களாக கேரளா திரும்ப முடியாமல் படக்குழுவினர் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிருத்விராஜின் மகள், ‘லாக்டவுன் எப்போது முடிந்து, நம் வீட்டுக்கு அப்பா எப்போது வருவார்?’ என்று கேட்டு அழுது அடம்பிடிப்பதாக, பிருத்விராஜின் மனைவி சுப்ரியா சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.
9) தமிழில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான படம், ஓ மை கடவுளே. அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் நடித்திருந்த இப்படம் தற்போது தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் ஆகிறது. தெலுங்கு ரீமேக்கை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். இதில் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கிறார். கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் அவரையே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர்.
10) வெங்கி இயக்கத்தில் உருவாகும் ராங்கி டே என்ற தெலுங்கு படத்துக்கு பி.சி.ராம் ஒளிப்பதிவு செய்கிறார். இதில் நிதின், கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இப்படம் குறித்து வெங்கியுடன் பி.சி.ராம் வீடியோகால் மூலம் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து விக்ரம் கே.குமார் இயக்கும் தெலுங்கு படத்தில் பணியாற்ற இருக்கும் பி.சி.ராம், அவரிடமும் வீடியோகால் மூலம் ஆலோசனை நடத்தினார். இவ்விரு போட்டோக்களையும் அவர்  தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
11) விஷால் நடித்த துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து நீக்கப்பட்ட இயக்குனர் மிஷ்கின், அடுத்து இரண்டு படங்கள் இயக்குகிறார். முதல் படத்துக்கான கதையை எழுதி முடித்துள்ள அவர், இதில் நடிக்கும் ஹீரோவை இன்னும் முடிவு செய்யவில்லையாம். அடுத்த படத்தில் சிம்புவை ஹீரோவாக இயக்கும் மிஷ்கின், இதன் கதையை இன்னும் முடிவு செய்யவில்லையாம்.
12) இதுவரை எத்தனையோ முன்னணி இளம் ஹீரோயின்களுக்கு சுலபமாகவும், சரளமாகவும் டப்பிங் பேசியுள்ள, ஒரு கிடாயின் கருணை மனு ஹீரோயின் ரவீணா ரவி, மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ள மாளவிகா மோகனனுக்கு டப்பிங் பேச மிகவும் சிரமப்பட்டாராம். காரணம், மாளவிகா முழுக்க, முழுக்க மலையாளம் கலந்த தமிழில் வசனங்கள் பேசியிருந்ததுதான். படத்தில் அவரது உதட்டசைவை கண்டுபிடித்து பேச மிகவும் சிரமப்பட்டதாக சொன்னார், ரவீணா ரவி.
13) பள்ளிப் பருவத்திலே என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இசை அமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம், தற்போது வசந்தபாலன் இயக்கியுள்ள ஜெயில் படத்தில் நடித்துள்ளார். மேலும், அவரிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். நடிக்க வருவதற்கு முன், தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி பிலிம் டெக்னாலஜி படித்துள்ளார், நந்தன் ராம்.




Tags : Pa Ranjith ,Arya , Pa Ranjith, directing, Arya, Tushara
× RELATED இந்தியா கூட்டணி வெற்றிபெற வேண்டும்: இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி