×

2015-16 முதல் 2018-19 நிதியாண்டு வரை ‘தள்ளி வச்சது’ 4 .32 லட்சம் கோடி வசூலிச்சது வெறும் 45 ஆயிரத்து 659 கோடி: ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்

சென்னை: வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு தப்பி ஓடிய மெகுல் சோக்‌ஷி உட்பட 50 பேரின் ₹68,607 கோடி கடனை வங்கிகள் கணக்கீட்டு ரீதியாக தள்ளுபடி செய்ததாக, சாகேத் கோகலே என்பவர் தாக்கல் செய்த ஆர்டிஐ மனுவிற்கு ரிசர்வ் வங்கி தகவல்களை வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தள்ளுபடி என வெளிப்படையாக கூறாவிட்டாலும், இதுபோன்ற கடன்களை வசூலிப்பது நடைமுறையில் சாத்தியமில்லை என வங்கியாளர்கள் கூறியிருந்தனர். ஆனால், மத்திய அரசு இதுகுறித்து அளித்த விளக்கத்தில், மேற்கண்ட கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறுவது தவறு. இவற்றை வசூலிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என கூறியிருந்தது.

இந்நிலையில், இவ்வாறு ‘கணக்கீட்டு ரீதியாக’ கடந்த 2015-16 நிதியாண்டில் இருந்து 2018-19 நிதியாண்டு வரை தள்ளுபடி செய்தது எவ்வளவு? இதில் வசூலித்தது எவ்வளவு என்பது தொடர்பாக, ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) விளக்கம் கோரியிருந்தது. இதில் கிடைக்கப்பட்ட தகவல் அறித்து அந்த நாளிதழில் வெளியிட்ட விவரங்கள் வருமாறு: கடந்த 2015-16 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரை வங்கிகள் வழங்கிய கடன்களில் 4,32,584 கோடியை வங்கிகள் ‘தள்ளி வைத்துள்ளன’. இதில் சுமார் 10 சதவீதம் மட்டுமே, அதாவது,  45,659 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. இதில், 2015-16 நிதியாண்டில் 56,842  கோடி, 2016-17ல் 79,041 கோடி, 2017-18ல் 1,24,236 கோடி, 2018-19ல் 1,72,465 கோடி கடன்கள் ‘தள்ளி வைக்கப்பட்டன’.  

இதில், 2015-16ல் 8,033 கோடி, 2016-17ல் 8,536 கோடி, 2017-18ல் 10,270 கோடி, 2019-20ல் 18,820 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. என தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், திவால் சட்ட திருத்தம் செய்யப்படுவதற்கு முன்பு, கடனை எளிதில் வசூலிக்க முடியாமல் ஆண்டுக் கணக்கில் இழுத்தடிக்கப்பட்டது. ஆனால், திவால் சட்ட திருத்தத்துக்கு பிறகு, நடைமுறையில் விரைவு காணப்பட்டது. இருப்பினும், பறிமுதல் செய்த சொத்துக்களை விற்கும்போதுதான், பல ஆண்டுகளில் சொத்துக்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட இயந்திரங்கள், தொழிற்சாலைகளின் மதிப்பு குறைந்திருந்ததால் மிக குறைந்த அளவே வசூலிக்க முடிந்தது என்றனர்.

நிதியாண்டு    ‘தள்ளிவைப்பு’    வசூலித்தது
2015-16    56842 கோடி    8,033 கோடி
2016-17    79041 கோடி    8,536 கோடி
2017-18    1,24,236  கோடி    10,270 கோடி
2018-19    1,72,465 கோடி    18,820 கோடி



Tags : Fiscal year, RTI, debt
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...