×

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 3,000 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் குடும்பங்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராஜா அண்ணாமலை மன்றத்தில் 200க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு திமுக மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ ஏற்பாட்டில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று அரிசி, பருப்பு, சத்துமாவு, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து, எழும்பூர் சூளை பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறினார்.

இதேபோல, திருவிக நகர் வெங்கடாத்திரி பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு தாயகம் கவி எம்எல்ஏ ஏற்பாட்டில் மருத்துவ முகாம் நடந்தது. இதில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, தொழிலாளர்களுக்கு தேவையான மருந்துகள், உடை மற்றும் பழம், காலை உணவு வழங்கினார்.
இதையடுத்து, கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உதவித் தொகை, பெரியார் நகர், கார்த்திகேயன் சாலையில் உள்ள திருவள்ளுவர் திருமண மண்டபத்தில் 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிளுக்கு அரிசி, பருப்பு மற்றும் மருத்துவ உபகரணம் உட்பட 20 வகையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உதவித் தொகையையும், ஜி.கே.எம் காலனியில் 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உதவித் தொகையும் வழங்கினார்.

தொடர்ந்து, வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளுக்கு ரங்கநாதன் எம்எல்ஏ ஏற்பாட்டில் அரிசி, பருப்பு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உதவி தொகை வழங்கினார். பின்னர், வில்லிவாக்கம் காவல் நிலைய காவலர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசம் உள்ளிட்டவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில், சேகர்பாபு எம்எல்ஏ, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Udayanidhi Stalin ,curfew ,families , Curfews, families, welfare assistance, Udayanidhi Stalin
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...