×

வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல்; கொரோனா காலத்திலும் ஆவின் பால் சாதனை

சென்னை: வரலாற்றில் இல்லாத வகையில், ஒரே நாளில் 34 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் அளவு மற்றும் பால் விலையை குறைத்து விட்டன. இதனால் பால் உற்பத்தியாளர்கள் சிக்கலில் தவித்தனர்.அவர்களுக்கு உதவும் வகையில், 100 புதிய பால் கூட்டுறவு சங்கங்கள், 378 பால் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டன. அவற்றின் வழியாக, 12 ஆயிரத்து, 800 புதிய உறுப்பினர்களை, ஆவின் நிர்வாகம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்புக்குள் கொண்டு வந்தது.

இந்நிலையில் மேலாண்மை இயக்குநர் வள்ளலார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆவின் நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் சாதனையை ஆவின் நிகழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 25 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மூலம் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பு, நாளொன்றுக்குச் சராசரியாக 28,50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தநிலையில், தற்போது அது 34 லட்சம் லிட்டர் என உச்சத்தை எட்டியிருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தருமாறு ஆவின் மேலாண்மை இயக்குநர் மா. வள்ளலார் அன்புடன் கேட்டுக்கொள்கிறார்.

ஊரடங்கு காலகட்டத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில், பால் உற்பத்தியாளர்களுக்குக் கலப்புத் தீவனம், தாது உப்புக்கலவை, பசுந்தீவனம் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது ஆவின் நிர்வாகம். அத்துடன் கால்நடை மருத்துவ உதவி தேவைப்படும் பால் உற்பத்தியாளர் வீடுகளுக்கே சென்று, ஆவின் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். பல்வேறு நடைமுறை சிரமங்கள் இருந்தாலும் அதைத்தாண்டி, ஊரடங்கு காலத்தில் பால் மற்றும் பால் பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சிறப்பாகச் சேவை செய்து வருகிறோம். பால் கொள்முதலில் சாதனை செய்தது போலவே, பால் விற்பனையிலும் சாதனை படைத்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : Aavin ,Corona ,milk record , Purchase, Corona, Avin Ball
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...