×

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம்

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே கிளாம்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் அரசு மதுபானக்கடை திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து குடிமகன்கள் படையெடுத்தனர்.  இதையறிந்த சுற்றுப்புற கிராம மக்கள், டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என வலியுறுத்தி நேற்று பகல் 11 மணியளவில் திடீரென கடை முன்பு திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.  தகவலறிந்த, ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மற்றும்  வெங்கல்,  பெரியபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கிராம மக்கள் போலீசாரிடம்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால், நீண்ட நேரத்திற்கு பிறகு கடையை போலீசார் மூடினர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு விடுதலை செய்தனர். பின்னர், 2 மணிக்கு மீண்டும் டாஸ்மாக் கடையை திறந்தனர். இதேபோல், மெய்யூரில் மதுபானம் வாங்க வரும், வெளியூரை சேர்ந்த நபர்களை கிராமத்தினுள் நுழைய விடாமல் மடக்கி விரட்டினர். பின்னர், கிராம சாலையில் மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர். பெரியபாளையம் போலீசார், பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.


Tags : struggle ,task shop ,villa shop , Task shop, villagers, struggle
× RELATED கோவை மருதமலை வனத்தில் உடல்நலம்...