×

நூற்றுக்கணக்கான வீடுகளில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்; ஒரு சிலரின் அலட்சியத்தால் குமரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்றுகள்: வெளியூர்களில் இருந்து வருபவர்களை கண்காணிப்பது யார்?

நாகர்கோவில்: மக்களில் ஒரு சிலரின் அலட்சியத்தால் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களை அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. குமரி  மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர். புதியதாக கொரோனா பாதிப்பு இல்லை என்றும், ஆரஞ்சு  மண்டலத்தில் இருந்து குமரி மாவட்டம் பச்சை மண்டலத்திற்கு மாறிவிடும் என்ற  எதிர்பார்ப்பு நேற்று காலை வரை மக்களிடம் இருந்தது. மருத்துவ வட்டார செய்திகளும் அதனை உறுதி செய்து வந்தன.

அதே வேளையில் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு காரணங்களை கூறியும், முறைகேடாக பாஸ் பெற்றும், தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தும்  நாள்தோறும் 200க்கும் மேற்பட்டவர்கள் குமரி மாவட்டம் வருகை தருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆரல்வாய்மொழி பகுதியில் சளி பரிசோதனைக்கு  உட்படுத்தப்படுகின்றனர். இவர்களின் சளி மாதிரிகள் சேகரித்த பின்னர் அவை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை முடிவுகள் வெளியிடப்படுகிறது. சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், குறிப்பாக சிவப்பு மண்டல பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றவர்கள் வீடுகளில் சென்று தங்களை குறைந்தபட்சம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர். ஆனால் வெளிநாடுகளில் இருந்தும், பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் வருகை தருகின்றவர்கள், அதிகாரிகளின் அந்த அறிவுரைகளை அலட்சியம் செய்துவிட்டு நேரடியாக தங்களது உறவினர்கள்,  நண்பர்களை சென்று சந்திப்பது, பக்கத்து வீடு, அடுத்த வீடுகளில் சென்று அங்கு இருப்பவர்களை சந்தித்து நலம் விசாரிப்பது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.

ஒரு சிலரின் அலட்சியப்போக்கால் அடுத்தடுத்த நாட்களில்  அவர்களின் வீடுகளை சுற்றிய ஒட்டுமொத்த பகுதிகளும் கட்டுப்படுத்த பகுதிகளாக மாற்றப்பட்டு மக்கள் ஒட்டுமொத்தமாக வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை  ஏற்படும் கடினமான சூழல் உருவாகியுள்ளது. வெளியூர்களில் இருப்பவர்கள்  அந்த பகுதியில் தங்கியிருக்க வேண்டும், அவர்களுக்கு தேவையான வசதிகள்  செய்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டபோதிலும் பலரும் அங்கிருந்து  தங்கள் சொந்த மாவட்டத்திற்கும், சொந்த ஊர்களுக்கும் எப்படியாவது சென்றாக  வேண்டும், அதற்கு எத்தனை ஆயிரங்கள் செலவானாலும் பரவாயில்லை என்ற முடிவோடு புறப்படுகின்றனர்.

ஆனால் அவ்வாறு வருகின்றவர்கள் தங்களை வீடுகளில்  தனிமைப்படுத்திக்கொள்ளாமல் வெளியே உலா வருகின்ற போதிலும் அதிகாரிகளால்  இவர்களை கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலவில்லை. அதற்கான வழிமுறைகளும்  இல்லாத நிலை உள்ளது. அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  தென்தாமரைக்குளம் மாணவி, கல்லுக்கூட்டதை சேர்ந்தவர் உள்ளிட்டோர் வீடுகளில்  இருக்காமல் வெளியே பல பகுதிகளுக்கும் சென்று வந்துள்ளது சுற்றுவட்டார  பகுதிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குமரி மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 40 நாட்களுக்கு மேலாக முழு ஊரடங்கில் சிக்கி மக்கள் தத்தளித்து வரும் வேளையில் ஒரு சிலரின் அலட்சியமான நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுவது ஏழை மக்களை வேதனையடைய செய்துள்ளது. இனியேனும்  வெளியூர்களில் இருந்து அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே சொந்த  ஊர்களுக்கு வருகை தர வேண்டும், மேலும் அவ்வாறு வருகை தருகின்றவர்கள் அடுத்த 28 நாட்களுக்கு தங்களை கண்டிப்பாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று  பொதுமக்கள் விரும்புகின்றனர்.

பாதிப்பை உறுதி செய்வதில் தாமதம்
அரசின்  பட்டியல்படி குமரி மாவட்டத்தில் 17 பேர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 பேரின் பெயர்  விபரங்கள் நேற்று காலை முதல் வாட்ஸ் ஆப்பில் வலம் வர தொடங்கின. அதிகாரிகள் இதனை ஒரு பக்கம் மறுத்துவந்தனர். சிலர் சந்தேகத்திற்குரிய பாதிப்பு என்றும் கூறி வந்தனர். ஆனால் 6ம் தேதி இரவு 12.30 மணியளவில் குமரி மாவட்டத்தில்  புதியதாக கொரோனா தொற்று 6 பேருக்கு கண்டறியப்பட்டது தொடர்பான தகவல்கள் தமிழக சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நேற்று  வியாழன் மாலையில் வெளியிடப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் புதிய பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் ‘அப்டேட்’ செய்யப்படாமல் பட்டியல் வெளியாகி  இருந்தது. அத்துடன் மூன்று பேர் நேற்று மாலை 4 மணிக்கு டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டனர். இது தொடர்பான தகவலும் முன்கூட்டியே தமிழக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கப்பட்டபோதிலும் அதுவும் குணமடைந்தவர்  பட்டியலில் நேற்று இடம்பெறவில்லை. பட்டியல் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க  சமன்படுத்தும் நடவடிக்கைகள் ஏதேனும் நடைபெறுகிறதா என்ற கேள்வியும்  மக்களிடம் எழுந்துள்ளது.

Tags : Hundreds ,homes ,Kumari ,outsiders , Kumari and corona infections
× RELATED சென்னை உள்நாட்டு விமான முனையத்தில்...