×

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு; ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் மட்டும் மதுவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு இடையே தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் 7-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்தநிலையில் 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன. நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 176 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Tags : task force shops ,Tamil Nadu ,Madhya Pradesh High Court Action High Court , Tamil Nadu, Task Shop, Orders, Online, Madras High Court
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து