×

ஊரடங்கு எதிரொலி: அழகர் கோவில் வளாகத்திலேயே பாதுகாப்பான முறையில் எழுந்தருளிய கள்ளழகர்..!

மதுரை: சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் நடைபெறாவிட்டாலும் அழகர் கோவிலில் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி தரிசனம் கொடுத்துள்ளார். இந்த ஆண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து மற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று அழகர்கோவிலில் வைத்து நடைபெறும் என இந்து அறநிலையத்துறை அறிவித்திருந்தது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு விட்டதால் அழகர் மலையை விட்டு இறங்க முடியவில்லை.

மலையை விட்டு இறங்காவிட்டாலும் கள்ளழகர் அழகர் மலையில் நடைபெற்ற சித்திரை திருவிழாவில் தரிசனம் கொடுத்தார். அழகர் மலையில் சித்திரை திருவிழா பக்தர்கள் யாருமின்றி நடைபெற்றது. முதலில் சிவப்பு நிற கண்டாங்கி புடவை கட்டி வேல்கம்பு சாற்றி, சவுரிக்கொண்டையுடன் தங்கப்பல்லாக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளினார். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை அணிந்து தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார் கள்ளழகர். அப்போது உடலில் வெண் பட்டும் மேலே பச்சைப்பட்டும் அணிந்திருந்தார் கள்ளழகர். அழகர் பச்சைப்பட்டு அணிந்திருந்ததால் மழைவளம் சிறக்கும் என்பது நம்பிக்கை. அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும்.

கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர்.  வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும்.

இப்படி நம்பிக்கை இருப்பதால் ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ? எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே பச்சைப்பட்டுதான் உடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர். இந்த ஆண்டும் கள்ளழகர் பச்சைப்பட்டு கட்டி தங்கக்குதிரை வாகனம் மீதேறி வந்து தரிசனம் கொடுத்தார். இன்று மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருகிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மாலை 4.30 மணிக்கு கோவிலின் உட்பிரகாரத்தில் நடத்தப்பட்டது. கள்ளழகரை நேரில் தரிசிக்க முடியலையே என்ற கவலையில் இருக்கும் பக்தர்களுக்கு மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் தரும் நிகழ்ச்சி https://tnhrce.gov.in/ என்ற இணையதளம்மூலம் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்புகின்றனர்.


Tags : Alarmuriya Kallazhakar ,temple complex , Curfew, beautiful temple, Kallazhagar
× RELATED மாமல்லபுரம் கடற்கரை கோயில்...