×

கொரோனா அதிகமாக பரவுவது குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: கொரோனா அதிகமாக பரவுவது குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம். அரசு கூறிய நடைமுறைகளை பின்பற்றினால் போதும் என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார். கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு களப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தமிழக மக்கள் தொகையை ஒப்பிடுகையில் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளது. விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நம்புகிறோம். கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

முதல்வர் தினந்தோறும் சிறப்பு குழுவோடு ஆய்வு செய்து சில ஆலோசனைகள் வழங்குகிறார். கொரோனா அதிகரிப்பிற்கு காரணம் பரிசோதனை அதிகரிப்புதான், தேவையற்ற அச்சம் வேண்டாம். 50 சதவீதம் நோய் தொற்று 6 மண்டலங்களில் தான் உள்ளது. தட்டாங்குளம் பகுதியில் 96 தொற்று பாதிக்கப்பட்டிருந்தது, தற்போது இல்லை. இந்தியாவில் தமிழகத்தில் இறப்பு விகிதம் 1.8 சதவீதம் சென்னை 0.9 சதவீதம் மட்டுமே. நோயாளிகள் கேன்சர், நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மூன்று நான்கு நாட்கள் சளி, காய்ச்சல் உள்ளவர்களுக்கு சுய உதவிக்குழு மூலம் பரிசோதனை செய்து வருகிறோம். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து யாருமே வெளியில் வராமல் இருக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மருத்துவ பரிசோதனையில் உள்ளவர்களை பார்க்க யாரும் வரவேண்டாம். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறை, பத்திரிகையாளர்கள் ஆகியோர் உழைத்து வருவதை பொதுமக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

முகக்கவசம் சரியாக பயன்படுத்த வேண்டும். 514 நோய் அறிகுறி உள்ளவர்கள் நோயாளிகளாக இல்லை என்றாலும் தனிமைப்படுத்தி பாதுகாப்பாக வர்த்தக மையம் மற்றும் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேவையான மருத்துவ வசதிகள் உள்ளது. முதல்வரின் நேரடியான கவனத்தில் தேவையான ஏற்பாடுகள் தயாராக உள்ளது. பொதுமக்கள் வேலை இல்லாமல் வெளியே வருவதை தவிர்க்கவும், இதனை தயவு செய்து பின்பற்ற வேண்டும். தேவையான அனைத்து வசதிகளையும் தீவிர ஆய்வுகளையும் மாநகராட்சி மற்றும் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Radhakrishnan Radhakrishnan ,coronavirus spread , Corona, People and Special Officer Radhakrishnan
× RELATED கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த...