×

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் புது வித ஊரடங்கு 50 நாள் முடக்கம்; 30 நாள் தளர்வு: ஆராய்ச்சியாளர்கள் புதிய வழிமுறை

லண்டன்: கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 50 நாட்கள் ஊரடங்கு மற்றும் 30 நாட்கள் தளர்வை அமல்படுத்தலாம் என்ற புதிய வழிமுறையை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2,48,818 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட 35ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை பிரதமர் போரீஸ் ஜான்சன் அறிவித்து வருகின்றார். இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக குறிப்பிட்ட நாட்கள் ஊரடங்கு மற்றும் குறிப்பிட்ட நாட்கள் தளர்வு என்ற புதிய வழிமுறையை இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் தொடர் ஊரடங்கை காட்டிலும் இடைவெளிவிட்ட ஊரடங்கை அமல்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ஆராய்ச்சிக்கு தலைமையேற்ற ராஜிவ் சவுத்ரி கூறியதாவது:50 நாட்கள் ஊரடங்குக்கு பின்னர், 30 நாட்கள் தளர்வு அளிக்கப்படவேண்டும், ஊரடங்கு மற்றும் தளர்வுகள் என மாறி மாறி நடைமுறைப்படுத்துவதன் மூலம் நோய் தொற்றை கட்டுப்படுத்தி நோய் பரவலை முறிக்க முடியும்.

அதே நேரத்தில் கொரோனா நோய் தொற்று சோதனை, தொற்று பாதிக்கப்பட்டோருடனான தொடர்பை கண்டறிதல், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும். இதன் மூலமாக நோய் பரவலை கட்டுப்படுத்துவதோடு, வேலையிழப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்டவற்றையும் தவிர்க்க முடியும் என்றார்.

Tags : coronavirus spread ,UK ,Researchers , The coronavirus virus. Curfew in England
× RELATED கொரோனா வைரசின் 2-ம் அலை தவிர்க்க...