×

காஞ்சி மாவட்டத்தில் 16 டாஸ்மாக் கடைகள் திறப்பு: அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ‘சரக்கு’: சென்னை குடிமகன்களுக்கு ‘செக்’

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று முதல் 16 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. அங்கு, அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ‘சரக்கு’ வினியோகம் செய்யப்படும். சென்னை குடிமகன்கள் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பொன்னையா எச்சரித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (மே 7) காஞ்சிபுரம் வட்டம், வாலாஜாபாத் வட்டம் மற்றும் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள 16 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்படும். சென்னையை ஒட்டியுள்ள குன்றத்தூர் மற்றும் பெரும்புதூர் வட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. காஞ்சிபுரம் வட்டத்தில் ரெட்டிப்பேட்டை தெரு, சாத்தான் குட்டை, செவிலிமேடு கங்கா நகர் கீழ்கதிர்பூர், வேடல், செவிலிமேடு, களியனூர் கிராமம், ஈஞ்சம்பாக்கம், திருப்புட்குழி, திம்மசமுத்திரம் வாலாஜாபாத் வட்டத்தில் ஊத்துக்காடு பகுதியில் 3, உத்திரமேரூர் வட்டத்தில் கடல்மங்கலத்தில் 2, சாலவாக்கத்தில் 1 என 16 டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்படும்.

மதுபானம் வாங்க வருபவர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்தும், தங்களது அடையாள அட்டையை (ஆதார்/வாக்காளர் அடையாள அட்டை / ஸ்மார்ட் கார்டு) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து, சமூக விலகலை கடைப்பிடித்து மனுபானம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
மதுபான கடைகளில் ஒரே நேரத்தில் 50 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, மதுபானம் விநியோகம் செய்தபின், வரிசையாக அடுத்தடுத்து 50 பேருக்கு டோக்கன் வழங்கி மதுபானம் வழங்கப்படும். ஒரு நபருக்கும் இன்னொரு நபருக்கும் 6 அடி தூரமாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கூடங்கள் திறக்க அனுமதியில்லை. இதில் விதிமீறல் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் மதுபானக் கூட உரிமம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர, மற்ற பகுதிகளில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் கடைளுக்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்:திருப்போரூர், செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் உள்ள 41 கடைகள் மட்டுமே இயங்கும் என கலெக்டர் ஜான்லூயிஸ் தெரிவித்துள்ளார்.



Tags : opening ,Tasks Stores ,District ,stores ,Citizens ,Chennai ,Kanchi ,Czech , Kanchi District, 16 Task Shops, Identity Cards, Madras Citizens
× RELATED திருச்செந்தூரில் தண்ணீர் பந்தல் திறப்பு