×

பேஸ்பால் போட்டியில் பொம்மை ரசிகர்கள்!

தைவானில் தொடங்க இருந்த சைனீஸ் புரோபஷனல் பேஸ்பால் லீக் (சிபிபிஎல்) போட்டி, கொரோனா பீதி காரணமாக   நிறுத்தப்பட்டு இருந்தது. அங்கு கொரோனா பாதிப்பு பெரிதாக  இல்லாத நிலையில் ஏப்ரல் 24ம் தேதி போட்டிகள் தொடங்கின. ஆனால், ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கிற்குள் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் சீனா ட்ரஸ்ட் பிரதர்ஸ் - யூனி லயன்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் வழக்கத்துக்கு மாறாக ரசிகர்களின் ஆரவாரம், மேளதாளம் என அமர்க்களப்பட்டது. கூடவே அரங்கம் முழுவதும் வீரர்களை வாழ்த்தி,  உற்சாகப்படுத்தும் பதாகைகள், அட்டைகள் காட்டப்பட்டன. ஆனால் அரங்கிற்குள் ஒரு ரசிகர் கூட இல்லை. அனைவரும் இயந்திர மனிதர்களான ரோபோக்கள்.

அதற்காக 5 ரோபோ கொண்ட இசைக்குழு போட்டி முழுவதும் டிரம்ஸ் வாசித்தது. வீரர்களை வாழ்த்தும் பதாகைகள், அட்டைகள் நாற்காலிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த பொம்மைகளின் கைகளில் இருந்தன.  அதனால் வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடினர். ரோபோக்கள் வீரர்களை உற்சாகப்படுத்தியதை பார்த்த சிபிபிஎல் நிர்வாகம், இவ்வார இறுதிக்குள்   ஆயிரம் ரசிகர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர்.
சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டிக்கு இப்படி ரசிகர்களை அனுமதிக்க உள்ளனர். கொரோனா பீதிக்கு பிறகு  முதல் முறையாக ரசிகர்கள் முன்னிலையில்  விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த முடிவுக்கு தைவானில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



Tags : Doll fans ,baseball match ,fans , Doll fans , baseball match!
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...