×

போலீஸ் பாதுகாப்புடன் தமிழகத்தில் டாஸ்மாக் இன்று திறப்பு மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு: வயதுவாரியாக நேரக் கட்டுப்பாடுகள் விதிப்பு

* மது வாங்க ஆதார், முக கவசம் கட்டாயம்
* ஐந்து, ஐந்து பேராக அனுமதிக்கப்படுவர்

சென்னை: சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. குறைந்தபட்சம் 2 போலீசார் முதல் அதிகபட்சம் 5 போலீசார் வரை டாஸ்டாக் கடையின் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. வயது வாரியாக நேரக்கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. மது வாங்க வருபவர்கள் ஆதார் வைத்திருப்பதும் முக கவசம் அணிவதும் கட்டாயம். மேலும் திடீரென டாஸ்மாக் நிர்வாகம் மதுபாட்டில்களின் விலையை ரூ.20 வரை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் கடந்த 43 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுவரை 4829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால் மக்கள் பொருளாதார நெருக்கடியில் தவிப்பதாக தகவல்கள் வெளியாகின. பல தொழில்கள் முடங்கின. இதனால், ஊரடங்கை படிப்படியாக தமிழக அரசு தளர்த்தி அறிவித்து வருகிறது.  அதன் ஒரு கட்டமாக டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும், மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா நோய் தொற்றுக்கு கோயம்பேடு சந்தை போல் மதுபானக்கடைகளும் ஒரு மையமாக மாறிவிடும் எனக்கூறி எச்சரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழக அரசு நோய் தொற்று பரவல் அதிகம் உள்ளதால் சென்னை போலீஸ் எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்றும், தமிழகத்தில் உள்ள மற்ற பகுதிகளில் விதிமுறைகளுடன் கடைகள் திறக்கப்படும் என்றும் தெரிவித்தது.இந்நிலையில் நேற்று தமிழக அரசு மதுபானங்களின் விலையை உயர்த்தி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தமிழகத்தில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு 31 ஆயிரத்து 500 கோடி வருவாய் கிடைத்தது. இந்த பொங்கல் பண்டிகை தினங்களில் மட்டும் மதுபான விற்பனை மூலம் தமிழக அரசுக்கு 606 கோடி வருவாய் கிடைத்தது.

புத்தாண்டில் தமிழகம் முழுவதும் மது விற்பனை மூலம் 315 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. மதுபான விலை உயர்வு மது பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. ஆனாலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்ட போதிலும் விற்பனையில் எந்த சரிவும் ஏற்படவில்லை.நாளுக்கு நாள் அதிகரித்தவாறு தான் உள்ளது. மேலும், கடைகள் இன்று திறக்கப்படுவதால், தேர்தலுக்கு ஓட்டுப்பதிவு மையத்தில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போல மதுக் கடைகளுக்கும் அதிகாரிகள் செய்துள்ளனர். வரிசையில் செல்வதற்காக சவுக்கு கட்டைகள் மூலம் கடைகளுக்கு முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் விலை உயர்வு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15 சதவீதம் உயர்த்தியுள்ள காரணத்தினால் சாதாரண வகை 180 மி.லி (குவாட்டர்) மதுபான பாட்டிலின் அதிக பட்ச சில்லறை விற்பனை விலை 10 கூடுதலாகவும்,

நடுத்தர மற்றும் பிரீமியம் வகை 180 மி.லி(குவாட்டர்) மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 கூடுதலாகவும் இன்று முதல் (7ம் தேதி) உயர்த்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தமிழக அரசு அறிவித்துள்ளது.  ஏற்கனவே பணம் இல்லாமல் மதுபிரியர்கள் திண்டாடி வரும் நிலையில் மதுபானங்களின் விலையை உயர்த்தி தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு மதுபிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த 4ம் தேதி ஆந்திராவில் மதுபாட்டில் மீது 75 சதவீதம் அதிகம் விலை உயர்த்தப்பட்டது. அதைப்போன்று டெல்லியிலும் மதுபானங்களின் விலை 70 சதவீதம் உயர்த்தப்பட்டது. மேலும் டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வருபவர்களுக்கு வயதுக்கு ஏற்ப நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் மதுபானங்கள் ஒருவருக்கு ஒரு புல் மது பாட்டில் மட்டுமே வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்கள் விடுறை எடுக்காமல் பணிக்கு வர வேண்டும். ஆதார் எடுத்து வருவதும், மாஸ்க் அணிந்து வருவதும் மது வாங்க வருபவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல் ஐந்து பேர் மது வாங்கிச் ெசன்ற பிறகே அடுத்து ஐந்து பேர் மது வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்பார்ப்பு அதிகரிப்பு
2018-19ம் நிதியாண்டில் டாஸ்மாக் வருவாய் 31 ஆயிரத்து 157 கோடியாக இருந்தது. தற்போது 40 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகள் திறக்கப்படாததால் இன்று ஒவ்வொரு கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படும். இதன் மூலம் இன்று ஒருநாள் மட்டுமே 150 கோடி வரை விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த வரிசை எண்ணுடன் டோக்கன், சேலம் உள்ளிட்ட மண்டலங்களில் பின்பற்றப்பட உள்ளது. மொத்த விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடை பணியாளர்களில் உடல் நலம் சரியில்லாத நபர்கள் மற்றும் 55வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிவர வேண்டாம் எனவும் சேலம் மண்டலம் தெரிவித்துள்ளது.

Tags : police protection ,Tamil Nadu ,Alcoholic , Police Security, Tamil Nadu, Task Force, Brewery, Aadhar
× RELATED தமிழ்நாடு முழுவதும் 39 வாக்கு...