×

கோயில் திருவிழா, சுபநிகழ்ச்சிகளுக்கு தடையால் பல ஏக்கரில் மரத்திலேயே பழுத்து தொங்கும் வாழைத்தார்: விவசாயிகள் கவலை

உடன்குடி: உடன்குடி சுற்றுவட்டார பகுதியில் பல ஏக்கரில் பயிரிப்பட்ட வாழைத்தார்கள் நல்ல விளைச்சல் இருந்தும் கொரொனா ஊரடங்கால் விலை இல்லாததால் மரத்திலேயே பழுத்து வீணாகி வருகிறது. எனவே அரசே கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடன்குடி, பரமன்குறிச்சி, மெஞ்ஞானபுரம், எள்ளுவிளை, திருச்செந்தூர், ஆத்தூர், குரும்பூர், சுகந்தலை, சொக்கப்பழங்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பிரதானமாக வெற்றிலை, வாழை பயிரிடப்படுகிறது. இந்த பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் கோழிகூடு, கதலி, ஏத்தன், நாடு, சக்கை உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகள் பயிரிடப்பட்டு வழக்கத்தை விட நல்ல விளைச்சல் கண்டுள்ளது.

தற்போது கொரொனா வைரஸ் தொற்று நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் முறையாக ஏலக்கடைகள், பழக்கடைகள் திறக்கப்படவில்லை. மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் தான் திருவிழா, சுபநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது திருவிழா, சுபநிகழ்ச்சிக்கு தடை இருப்பதால் வாழைத்தார்களின் தேவையும் குறைந்து விட்டது. வாழைத்தார், வாழை இலைகளை வாங்க வெளிமாவட்டம், வெளிமாநில வியாபாரிகளும் வரவில்லை. இதனால் நல்ல விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் அவற்றை வெட்டுவதற்கான கூலி கொடுக்க கூட முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.

ஏக்கருக்கு பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பயிரிடப்பட்ட வாழைத்தார்களை வெட்ட முடியாமல் மரத்திலேயே பழுத்து வீணாகி வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். எனவே வாழைத்தார்களை அரசே கொள்முதல் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். மேலும் நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : festivals ,Temple ,temple festivals , Temple festival, auspiciousness, banana, farmers
× RELATED கோயில் தேர் திருவிழாவில் அசம்பாவிதம்...