×

43 நாட்களுக்கு பின்னர் சிவகாசியில் பட்டாசு ஆலைகள் திறப்பு: 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர்

சிவகாசி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சிவகாசியில் அடைக்கப்பட்ட பட்டாசு ஆலைகள், 43 நாட்களுக்கு பிறகு பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று காலை  திறக்கப்பட்டன. ஆலைகளில் 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே பணியாற்றினர்.  
விருதுநகர் மாவட்டத்தில் 1,170 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் 5 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொழிலாளர்கள் அனைவரும் வருமானமின்றி, பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் உள்பட பல்வேறு நிவாரணங்களை வழங்கினர். இந்த நிலையில், ஊரகம் மற்றும் கிராமப் பகுதிகளில் நிபந்தனைகளுடன் பட்டாசு ஆலைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலைகளில் 50 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும், முறையான மருத்துவப் பரிசோதனைகளுக்கு பின்னரே தொழிலாளர்களை பணிபுரிய அனுமதிக்க வேண்டும், சமூக இடைவௌியை கடைபிடிக்க வேண்டும், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்,

சானிடைசர் இருக்க வேண்டும், ஆலையை திறக்கும்போது, மூடும் போது கண்டிப்பாக கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.  இந்த நிலையில், 43 நாட்களுக்கு பிறகு சிவகாசி புறநகர் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் இன்று காலை திறக்கப்பட்டன. பணிக்கு வந்த தொழிலாளர்கள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்து தொழிலாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பணியை மேற்கொண்டனர்.

இது குறித்து சிவகாசி பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் சோனி கணசேன் கூறுகையில், ‘‘ஊரடங்கு உத்தரவால் ரூ.300 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது 50 சதவீத தொழிலாளர்களுடன் பணியாற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதால், நிச்சயம் உற்பத்தி பாதிக்கும். தீபாவளிக்கு தேவையான அளவு பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியாது’’ என்று தெரிவித்தார்.



Tags : fireworks mills ,opening ,Sivakasi , Sivakasi, Fireworks, Opening
× RELATED சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!