×

பொருளாதாரத்தை மீட்க எளிதான வழி நாட்டின் 60 சதவீத மக்களிடம் நேரடியாக பணம் தர வேண்டும்: ராகுலிடம் அபிஜித் பானர்ஜி ஆலோசனை

புதுடெல்லி: ‘‘நாட்டின் கீழ்மட்டத்தில் உள்ள 60 சதவீத மக்களின் கைகளில் நேரடியாக பணத்தை தருவதே பொருளாதாரத்தை மீட்பதற்கான எளிதான வழி’’ என நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி, ராகுல் காந்தியிடம் ஆலோசனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ், பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்து பொருளாதார நிபுணர்களுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இதுதொடர்பாக, முதலில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசித்த அவர், தற்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியிடம் பேசிய வீடியோவை காங்கிரஸ் தனது சமூக ஊடக தளங்களில் நேற்று வெளியிட்டது.

இதில், அபிஜித் பானர்ஜி கூறிய ஆலோசனைகள்: நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை மீட்பது பற்றி நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கான சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரையில் அதிகப்படியான பொருளாதார ஊக்குவிப்பு நிதித்தொகுப்பு தேவைப்படுகிறது. இதைத் தான் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் கையில் எடுத்துள்ளன. இந்த விஷயத்தில் அமெரிக்காவை நாம் பின்பற்ற வேண்டும். அவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்தை நிதித்தொகுப்பாக வழங்கி உள்ளனர். ஆனால், நாம் 1 சதவீத ஜிடிபியை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். தேவைக்கு ஏற்ப பொருளாதார நிதித் தொகுப்பு வழங்கப்பட வேண்டும்.

வங்கிக் கடன்களுக்கான 3 மாத கால அவகாசம் நல்ல முடிவு என்றாலும் அதை விட அதிகமாக நம்மால் செய்ய முடியும். காலாண்டிற்கான கடன் திருப்பி செலுத்துதல் தொகை ரத்து செய்யப்பட வேண்டும். அதை அரசே ஏற்றுக் கொள்ளலாம். சிறு குறு நடுத்தர தொழில் துறைக்கு புத்துயிர் தர நிதித்தொகுப்பு வழங்குதல் மட்டும் போதாது. மக்களின் கைகளில் நேரடியாக பணம் தர வேண்டும். ஏழைகள் மட்டுமின்றி கீழ்மட்டத்தில் உள்ள 60 சதவீத மக்களின் கைகளில் நேரடியாக பணம் சென்றடைய வேண்டும். அதில் சிலருக்கு பணத்தேவை இல்லாமல் கூட இருக்கலாம். கவலையில்லை. ஆனால் அந்த பணத்தை அவர்களை செலவழிக்க விட வேண்டும்.

அப்போதுதான் பொருளாதாரம் தானாக மீண்டெழும். மக்களின் கைகளில் பணம் கிடைப்பதன் மூலம் கடைகளுக்கு சென்று பல்வேறு பொருட்களை வாங்குவார்கள். அந்த பணப்புழக்கமே பொருளாதாரத்தை மீட்பதற்கான எளிதான வழி. இதைத்தான் அமெரிக்காவும் செய்து வருகிறது. ஆதார் அட்டைகள் பொதுவான தேசிய அடையாள அட்டைகள் இருப்பதால், அதனை அடிப்படையாக கொண்டு தேவைப்படுவோருக்கு தற்காலிக ரேஷன் அட்டைகள் கொடுக்கலாம். ரேஷன் அட்டை இல்லாத நபர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் தற்காலிக ரேஷன் அட்டைகள் கொடுக்கலாம்.

அதன் பின்னர் மேலும் 3 மாதங்கள் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தலாம். இதன் மூலம் வெளிமாநில தொழிலாளர்கள் அத்தியாவசிய உணவின்றி தவிப்பதற்கு தீர்வு காண முடியும். இவ்வாறு அவர் கூறினார். ஊரடங்கு தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கும் தர வேண்டும் என்ற ராகுலின் கருத்தையும் அபிஜித் பானர்ஜி ஏற்றுக் கொண்டார்.

Tags : Abhijeet Banerjee ,Rahul Gandhi ,country , Economy, Rahul Gandhi, Corona, Curfew, Abhijit Banerjee
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...