×

காஷ்மீர் நிலையை படமெடுத்த 3 இந்தியருக்கு புலிட்சர் விருது

காஷ்மீர்: காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்ட சமயத்தில் ஊரடங்கு நிலை, வன்முறை சம்பவங்களை தத்ரூபமாக படமெடுத்த 3 இந்திய புகைப்பட கலைஞர்களுக்கு புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இலக்கியம், பத்திரிகை, ஆன்லைன் ஜர்னலிசம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கடந்த 1917ம் ஆண்டு முதல் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. இதில் 2020க்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. இம்முறை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பத்திரிகையாளர்களான தர் யாசின், முக்தர்கான், சானி ஆனந்த் ஆகிய மூவர் புலிட்சர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.  இவர்கள் ஏ.பி. உள்ளிட்ட முன்னணி பத்திரிகையில் புகைப்பட கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

கடந்த ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியது. அதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டது. உள்ளூர் அரசியல் தலைவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
இதனால் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. அந்த கடுமையான காலக்கட்டத்தில் காஷ்மீரின் நிலையை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்த 3 புகைப்படக் கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அவர்களை காஷ்மீரின் முன்னாள் முதல்வரான தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா, பிடிபி கட்சி தலைவர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்தி உள்ளிட்ட உள்ளூர் தலைவர்களும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜ கடும் தாக்கு: புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ராகுல் காந்தியை பாஜ கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, தனது டிவிட்டர் பதிவில் ‘‘ஆன்டி இந்தியன் ராகுல் காந்தி’ என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட்ட பதிவில், ‘‘காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா இல்லையா என்பது பற்றி பதில் சொல்லப் போவது ராகுலா? சோனியா காந்தியா? காஷ்மீர் ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாக கருதுபவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதை ராகுல் காந்தி பாராட்டி உள்ளார்’’ என கூறி உள்ளார்.
 

Tags : filmmakers ,Indian ,Kashmir Indian ,Kashmir , Kashmir, 3 Indians, Pulitzer Prize
× RELATED நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட...