×

சென்னையில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது: ஒரே நாளில் 279 பேருக்கு பாதிப்பு,.. மாநிலத்தில் 4 ஆயிரமாக அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 508 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு  4 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ஒரே நாளில் 279 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 2008ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 820 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், நேற்று மட்டும் 11 ஆயிரத்து 858 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதில், சென்னையில் அதிகபட்சமாக 279 பேர், செங்கல்பட்டு 38, கடலூர் 68, தர்மபுரி, 1, திண்டுக்கல் 7, கள்ளக்குறிச்சி 38, காஞ்சிபுரம் 1, கிருஷ்ணகிரி 2, நாமக்கல் 15, நீலகிரி 4, தேனி 5, திருவள்ளூர் 18, விழுப்புரம் 25, பெரம்பலூர், சேலம், தென்காசி, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, விருதுநகர் தலா ஒருவர் என மொத்தம் 508 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4058 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருநாளில் 353 ஆண்கள், 154 பெண்கள், ஒரு திருநங்கை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,745 ஆண்களும், 1311 பெண்களும் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் நேற்று வரை சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1485 ஆக உயர்ந்துள்ளது.

சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 2,537 ஆக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயிரிழந்துள்ளது. இதுவரை 1,74,174 மாதிரிகளில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 596 மாதிரிகளில் முடிவுகள் வர வேண்டியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முதன்முறையாக 2 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்படாமல் பச்சை மண்டலமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று 52 வயது பெண், 60 வயது பெண் ஆகிய 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி ஆரஞ்ச் மண்டலமாக மாறியுள்ளது.

ஒரே நாளில் 18 குழந்தைகளுக்கு பாதிப்பு: தமிழகத்தில் சென்னையில் 10 வயதுக்குட்பட்ட 13 குழந்தைகளும், செங்கல்பட்டில் 2, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருவள்ளூரில் தலா 1 குழந்தைகளும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக 2 தனியார் ஆய்வகம் அனுமதி: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து பரிசோதனை செய்ய 36 அரசு ஆய்வகம், 16 தனியார் ஆய்வகம் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக திருச்சி, கோவையில் தலா 1 தனியார் ஆய்வகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்தது: கடந்த சில நாட்களாக 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் 266 பேர், நேற்று 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2008 ஆக உயர்ந்துள்ளது.

Tags : influx ,Chennai , Madras, Corona, State, Curfew
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...