×

குடிமகன்கள் அவதிப்படக்கூடாது என்பதால் டாஸ்மாக்கை திறக்கிறோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

மதுரை: ‘குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்பதற்காகவும், பொருளாதாரம்  பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவுமே டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர்  முடிவு செய்தார்’ என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: மே 17க்கு பிறகும் ஊரடங்கு  நீடிக்கக் கூடாது என்று அனைவரும் ஆண்டனை வேண்டிக் கொள்ளுங்கள். அதற்கு  அனைவரும் தனித்திருக்க வேண்டும். இன்னும் சமூகப் பரவலாக இந்த வைரஸ்  மாறவில்லை.
கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. கொரோனா நிவாரண நிதியாக மேலும் ஆயிரம் ரூபாய் தரும்படி கோரிக்கை வைத்துனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பரிசீலிப்பார். நிதி நிலைக்கு ஏற்ப கொரோனா நிதி தரப்படும்.

 தமிழகத்தை சுற்றியுள்ள மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறந்திருப்பதால்,  தமிழகத்தை சேர்ந்த குடிமகன்கள் அங்கு  அதிகளவில் சென்று மது வாங்குகின்றனர். பின் நாம் திறக்காமல்  இருக்க முடியாது.  கள்ளச்சாராயம் பெருகி வருகிறது. இதனை கருத்தில் கொண்டுதான், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையை திறக்கும் முடிவை  முதல்வர் மனமுவந்து எடுக்கவில்லை. குடிமகன்கள் அவதிப்படுகிறார்கள் என்ற அடிப்படையில்தான்  மதுக்கடைகளை திறக்க முதல்வர் திட்டமிட்டார். பொருளாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகளை திறக்க முதல்வர் முடிவு செய்துள்ளார். சமூக இடைவெளியை பின்பற்றி மது  வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 மதுரையில் தனி கடைகள் திறப்பதில் ஏதேனும் சிக்கல் இருப்பின். உடனே வியாபாரிகள் சங்கத்தின் சார்பிலோ, தனியாகவோ என்னை செல்போனில் தொடர்பு கொள்ளலாம். நான் அவர்களது பிரச்னையை, போலீசாருடன் பேசி தீர்த்து வைப்பேன்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Selur Raju ,Tasmaq ,citizens , Citizens, Tasmac, Minister Selur Raju
× RELATED துபாய் மழை, வெள்ளம்: பாதிக்கப்பட்ட...