×

அவசர சிகிச்சைகளுக்கு சிக்கல் தரும் குருதி தட்டுப்பாடு!! : கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இதயத்தால் இணைவார்களா கொடையாளர்கள்

சென்னை: ரத்த தானம் செய்யும் போது கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் கொடையாளர்களுக்கு எழுந்துள்ளதால் ரத்த வங்கிகளில் ரத்த தட்டுப்பாடு உருவாகியுள்ளது. கொரோனா பிடியில் மக்கள் சிக்கி தவிக்கும் நிலையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. சகஜமாக சந்தித்து வந்த மக்கள் தற்போது சமூக இடைவெளியை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் கொரோனா அச்சம் பல்வேறு கிளைகளாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

அதில் ஒன்று ரத்த தானம் செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல். பொதுவாக சென்னையில் நாள் ஒன்றுக்கு 3,000 முதல் 4,000 யூனிட் வரை ரத்தமும், தமிழகத்தில் ஒரு மாதத்திற்கு சுமார் ஒரு லட்சம் யூனிட் அளவுக்கான ரத்தமும் ரத்த வங்கிகள் மூலம் பெறப்படும். ரத்த தானம் என்பது பெரும்பாலும் ரத்த தான முகாம்கள் மூலமாகவே ரத்த வங்கிகளில் சேமிக்கப்படும். ஆனால் கொரோனா காலத்தில் ரத்த தானம் செய்தாலோ, ரத்த தானம் செய்ய மருத்துவமனைக்கு சென்றாலோ கொரோனா வைரஸ் தொற்றிவிடும் என்ற அச்சத்தால் ரத்த தானம் செய்வதையே பலர் தவிர்த்து வருகின்ற்னர். இதனால் ரத்த தானமானது சொற்ப அளவிலேயே செய்யப்படுகிறது.

இதனையொட்டி ஆபத்து நேரத்திற்கு ரத்தம் கொடுத்து உயிர்களுக்கு உதவ முடியாத நிலையில் தவிக்கின்றனர் ரத்த வங்கி வைத்திருப்போர். விபத்தில் சிக்குவோருக்கும் பிரசவ காலத்தில் பெண்களுக்கும் அவசர அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் என்பது அத்தியாவசியம். அதிலும் ரத்த குறைபாடோடு பிறக்கும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை ரத்தம் செலுத்த வேண்டிய கட்டாயமும் உள்ளது. ஆகையால் ரத்த தானங்கள் ரத்தாகும் போது பச்சிலம் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் கொரோனாவை மனதில் கொண்டு ரத்த தானம் செய்ய அச்சப்படுவது அவசியமற்றது என்றும்,

ரத்தம் வழங்குவதற்கும் கொரோனாவுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் உறுதியோடு விளக்குகின்றனர் மருத்துவ நிபுணர்கள். ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் ஆண்டுக்கு 4 முறை கூட ரத்தம் வழங்கலாம் என அறிவுறுத்தும் மருத்துவர்கள், ரத்தம் வழங்குவதால் புதிய ரத்த அணுக்கள் உருவாகி புத்துணர்ச்சி பிறக்கும் என்று தெரிவிக்கின்றனர். இந்த ஆலோசனைகளையும் கடந்து ஒரு உயிருக்கு உதவும் மகிழ்ச்சி மனதில் மலரும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இன்னல் வரும் காலங்களிலும், இடையூறு காலங்களிலும் கைகளை இணைக்க முடியாவிட்டாலும் இதயத்தால் இணைபவர்கள் அச்சமின்றி வழங்கலாம் ரத்தத்தை, எச்சரிக்கையோடு எதிர்கொள்ளலாம் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தை.


Tags : Donors ,war ,Corona , Urgent Care, Bloody Disorders, Coronas, Donors
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்