×

காயல்பட்டினம் கடல் பகுதியில் திடீர் மணல் திட்டு: 19 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உருவான அதிசயம்

ஆறுமுகநேரி:  காயல்பட்டினம் அருகே கடல் பகுதியில் 19 ஆண்டுகளுக்கு பின்பு அதே பகுதியில் திடீர் மணல் திட்டு ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் கொம்புத்துறையிலிருந்து கடலுக்கு உள்ளே 4 கி.மீ. தூரத்தில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் நீளவாக்கில் திடீர் மணல் திட்டு காணப்பட்டது. கடலில் மீன் பிடிக்கச் சென்ற காயல்பட்டினம் மீனவர்கள் அதைக்கண்டு ஆச்சரியமடைந்தனர். கடல் மட்டத்தில் இருந்து 5 முதல் 7 அடி வரை உயரமாக காணப்பட்டது. சில நாட்களில் அந்த திட்டு மறைந்து போனது. இந்நிலையில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் அதே இடத்தில் மீண்டும் மணல் திட்டு தோன்றியுள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் மீனவர்கள் பலர் மீன் பிடிக்கச் செல்லாமல் இருந்து வருகின்றனர். இதனால் கொம்புத்துறையிலிருந்து கடலுக்கு உள்ளே 4 கி.மீ தூரத்தில் உருவான மணல் திட்டை பற்றி வெளியில் தெரியாமல் இருந்து வந்தது.

 நேற்று முன்தினம் மணல் திட்டு மூழ்கும் நிலையில் வெளியூரில் இருந்து சென்ற மீனவர்கள் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் அப் குரூப்பில் அனுப்பியுள்ளனர். அதில் மீனவர்கள், மணல் திட்டில் இறங்கி ஆனந்தமாக விளையாடி மகிழ்வது போல் உள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் சென்ற சிலர் அங்கு அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்து வந்துள்ள தகவலும் வெளியாகி உள்ளது.தற்போது இந்த மணல் திட்டு 1 அடி முதல் 2 அடி வரை தண்ணீரில் மூழ்கியுள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்துள்ளன.

இத்தீவுகளை சுற்றியுள்ள 560 சதுர கி.மீட்டர் பரப்பளவில் ஆழம் குறைந்த கடற்பகுதி உள்ளது. இதனை தமிழக அரசு கடல் சார் தேசிய பூங்காவாக அறிவித்துள்ளது.
 மேலும் இப்பகுதியில் பல்வேறு சிறிய தீவுகளும் உள்ளன. இதே போன்ற சிறிய தீவு தான் தற்போது தோன்றி மறைந்திருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.  மேலும் கடல் பகுதியில் திடீரென ஏற்படும் மணல் திட்டு எதனால் உருவானது என்பது பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Kayalpattinam Sea , Sudden ,thunderstorms,Kayalpattinam, later
× RELATED நாகர்கோவிலில் பஸ் நிலையங்கள், ரயில்...