×

பங்குச்சந்தை கடும் சரிவு: 5.8 லட்சம் கோடி இழப்பு: மாபெரும் சந்தை சரிவுகள்

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் நேற்று ஏற்பட்ட கடும் சரிவால், முதலீட்டாளர்கள் ₹5.82 லட்சம் கோடியை இழந்தனர்.  பொருளாதார மந்தநிலை தொழில்துறைகள் ஏற்கெனவே முடங்கின. தற்போது கொரோனா பரவலும் உலகம் முழுக்க தீவிரம் அடைந்துள்ளது. உயிர்ப்பலிகள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதனால், தொழில்துறைகள் ஸ்தம்பித்து, பொருளாதாரம் பெரும் ஆட்டம்காண துவங்கியுள்ளது. தொழில்துறைகள் பின்னடைவு, பொருளாதார மந்தநிலை காரணமாக கடந்த 2 ஆண்டாகவே பங்குச்சந்தையில் ஸ்திரமற்ற நிலைதான் நிலவி வருகிறது.  தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பும் சேர்ந்து கொண்டதால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான இழப்பால் அதிர்ச்சியில் ஆழ்ந்து வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் 20ம் தேதி தொடங்கி, ஒரே நாளில் 3,934.72 புள்ளிகள் வீழ்ச்சியுடன் மிகப்பெரிய சரிவை சந்தித்த, மார்ச் மாதம் 23ம் தேதி வரை மட்டும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் 56.84 லட்சம் கோடியை இழந்தனர். மூன்று பெரிய பங்குச்சந்தை சரிவுகள் கடந்த மார்ச் மாதத்தில்தான் ஏற்பட்டன. இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் துவங்கிய பிறகு 2 முறை நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் துவக்க நிலையிலேயே முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. மிகப்பெரிய சரிவான கடந்த மார்ச் 23ம் தேதி மட்டும் 14 லட்சம் கோடியை வாடிக்கையாளர்கள் இழந்தனர்.  தற்போது ஊடங்கு பிறப்பிக்கப்பட்டு தொழில்துறைகள் முற்றிலும் முடங்கி விட்டதால், பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தவர்கள் கடும் இழப்பால் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

நேற்றும் பங்குச்சந்தைகளில் கடும் சரிவுகள் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,002.27 புள்ளிகள் சரிந்து, 31,715.35 ஆக இருந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 566.40 புள்ளிகள் சரிந்து 9,293.50 ஆனது.   கொரோனாவால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தற்போது 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தொழில்துறைகள் முழுமையாக செயல்படுவதற்கான சூழ்நிலைகள் இல்லை. அதோடு, அமெரிக்கா சீனா இடையிலான பதற்றம் போன்ற காரணங்களால் பங்குச்சந்தை ஆட்டம் கண்டது.

 இந்தியாவின் உற்பத்தி புள்ளி சரிவு, முக்கிய தொழில்துறைகளில் ஏற்பட்ட சரிவு ஆகியவயும் மற்றொரு காரணம். வராக்கடன் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதால், வங்கிப் பங்குகள் அதிகம் சரிவை சந்தித்தன. உலோகம், நுகர்வோர் பொருட்கள், ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறை பங்கு மதிப்புகளும் சரிந்தன. மொத்தத்தில், நேற்று ஒரே நாளில் மட்டும் மும்பை பங்குச்சந்தையில் 1,29,41,620.82 கோடியாக இருந்த பங்குகளின் மதிப்பு 5,82,695.93 கோடி சரிந்து 1,23,58,924.89 கோடியாக ஆனது.


Tags : Stock market crash ,market downturns , Stock markets, downturns, market downturns
× RELATED பங்குச்சந்தை வீழ்ச்சியால் அமித்ஷா...