×

திருவிழாக்கள், திருமணங்கள் ரத்து வாங்குவதற்கு ஆளில்லை வீணாகிறது வாழை இலை: கால்நடைகளுக்கு தீவனமாக போடும் திருப்புவனம் விவசாயிகள்

திருப்புவனம்: ஊரடங்கு உத்தரவால்  திருப்புவனத்தில் வாழை இலைகள் விற்பனைக்கு அனுப்ப முடியாமல் மரத்திலேயே காய்ந்து வீணாகின்றன.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில்  திருப்புவனம் புதூர், பழையூர், நைனார்பேட்டை, கலியாந்தூர், அல்லிநகரம், திருப்பாச்சேத்தி, கானூர், கல்லூரணி, பச்சேரி மழவராயநேந்தல்  பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கிணற்று பாசனத்தின்  மூலம்  தண்ணீர் பாய்ச்சி,  உரம் வைத்து  ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு உத்தரவால் கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வாழை இலைகளை யாரும் வாங்க முன்வரவில்லை. எனவே வாழை இலைகள் மரத்திலேயே காய்ந்து வீணாகி வருகின்றன. இவற்றை அறுத்து ஆடு, மாடுகளுக்கு தீவனமாக போட்டு வருகின்றனர்.

திருப்புவனம் புதூர் விவசாயி செல்வம் கூறுகையில்,  ‘‘வாழை விவசாயிகள் பெரும்பாலும் முகூர்த்த நாட்கள், திருவிழாக்களை கணக்கிட்டு சாகுபடி செய்வோம். இந்தாண்டு பங்குனி, சித்திரை திருவிழாக்களை நம்பி நடப்பட்ட வாழை மரங்களில் தற்போது இலைகள், காய்கள் நல்ல படியாக விளைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திருவிழாக்கள், திருமணங்கள் ரத்து செய்யப்பட்டதால்  வாழை இலைகளை விற்கமுடியவில்லை. நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தார்களை அறுக்காமல் மரத்திலேயே விட்டுவிட்டேன். இதனால் நானும் என்னை போன்று வாழை பயிரிட்ட விவசாயிகளும் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றோம். வாழைக்கு  காப்பீடும் செய்துள்ளேன். இழப்பீட்டை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.



Tags : cattle Festivals ,weddings ,cancellation , Festivals ,weddings , Thrippavanam,livestock
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...