×

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் கர்னல் உட்பட 5 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி கண்டனம்

காஷ்மீர்:  ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கர்னல், மேஜர் உட்பட ராணுவத்தை சேர்ந்த 5 பேர் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா சங்கிமுல்லா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், அங்குள்ள  வீட்டில் பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து  போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். நேற்று காலை முதல் தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் வகையில்  வீரர்கள் தாக்குதலை தொடங்கினார்கள். இந்த  துப்பாக்கிச் சண்டை நள்ளிரவு வரை நீடித்தது. இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகள் பிடியில் இருந்த பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.  எனினும் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 2 ராணுவ மூத்த அதிகாரிகள்,  ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரின் வடக்குப் பகுதியில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் நேற்று  இரவிலிருந்து நடந்த பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் ராணுவ  மேஜர்,  கர்னல் உள்பட 5 பேர் வீரமரணமடைந்தனர். பயங்கரவாதிகள்  இருவர்  சுட்டுக்கொல்லப்பட்டனர் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கர்னல்  அசுடோஷ்  சர்மா, மேஜர் அனுஜ் உள்பட ஜம்மு காஷ்மீர் போலீஸ் காவல் துணை ஆய்வாளர் சகீல்  குவாஸி உள்ளிட்ட 5 பேர்  பயங்கரவாதிகளால்  கொல்லப்பட்டனர்.

இந்த  நிலையில், பயங்கரவாதிகளுடனான சண்டையில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர்  மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது  டிவிட்டர் பதிவில், ‘‘ஹந்த்வாராவில் வீர  மரணம் அடைந்த வீரமிக்க நமது வீரர்களுக்கும்  பாதுகாப்பு படையினருக்கும்  அஞ்சலி செலுத்துகிறேன்.  தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் வீரர்கள் பணியாற்றியுள்ளனர். நாட்டு மக்களை பாதுகாக்க ஓய்வின்றி உழைத்தனர். வீர மரணம்  அடைந்த வீரர்களின்  குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல்  தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.



Tags : Modi Five ,attacks ,Kashmir ,Colonel , Kashmir, militants, colonel, 5 people killed, PM Modi
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!