×

சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி வடமாநிலத்தவர் போராட்டம்

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் 900 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இங்கு வட மாநிலத்தைச் சார்ந்த 750க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மேற்கண்ட தொழிலாளர்கள் வேலையின்றி கட்டுமான இடத்திலேயே முடங்கிக் கிடந்தனர். இவர்களுக்கு  தன்னார்வலர்கள், போலீசார் உணவளித்து வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களாக தொழிலாளர்கள் உணவின்றி அவதிப்பட்டு  வந்தனர்.  கடந்த 1ம் தேதி இரவு மீண்டும் ஊரடங்கு உத்தரவு வருகின்ற 17ம் தேதி வரை பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.

 இதனையடுத்து, நேற்று காலை வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடிவு எடுத்து தங்கியிருக்கும் இடத்தில் இருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறினர். பின்னர், அவர்கள் திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலைக்கு வரத்தொடங்கினர். தகவலறிந்த ஆவடி போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்கள் “நாங்கள் 40 நாட்களுக்கு மேலாக வேலையின்றி தவிக்கிறோம். எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்” என கேட்டனர். இதனையடுத்து,  போலீசார் அவர்களிடம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.


Tags : Hometown. ,Hometown , Hometown, Northern Territory, Struggle, Corona
× RELATED எடப்பாடி சொந்த ஊரில் அதிமுகவில்...