×

தெலங்கானாவில் பணி ஓய்வு பெற்று 30 நாட்களாகியும் ஊருக்கு வரமுடியாமல் தவித்த ராணுவவீரர்கள்: அணைக்கட்டு எம்எல்ஏ உதவியால் வீடு திரும்பினர்

வேலூர்: நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கிடையே கடந்த மார்ச் 31ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் பணிபுரிந்த 500 ராணுவவீரர்கள் பணி ஓய்வு பெற்றனர். அந்தநேரத்தில் ஊரடங்கு அமலில் இருந்ததால், ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் ஊர் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து உரிய அனுமதி பெற்று சொந்த ஊருக்கு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் உடன் இருந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள் அவர்களது மாநில எம்எல்ஏ, எம்பிக்கள் உதவி பெற்று சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

இதில் தமிழகத்தில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இடையன்சாத்து கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன், விழுப்புரம் செல்வகுமார், பூந்தமல்லி ராஜ்மோகன் உட்பட 8 பேர் மட்டும் தெலங்கானாவில் இருந்துள்ளனர். அவர்களும் சொந்த ஊர் திரும்ப மதுரை, தேனி, சேலம், விழுப்புரம் என்று அந்தந்த மாவட்டங்களில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்களிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால், யாரும் சொந்த ஊர் திரும்ப உதவி செய்யாமல் பல்வேறு காரணங்கள் சொல்லி தட்டிக்கழித்தார்களாம்.

ஓய்வு பெற்ற ராணுவவீரர் கார்த்திகேயன் கடந்த 30ம் தேதி அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாரை தொடர்புகொண்டு, பணி ஓய்வு பெற்று 30 நாட்களாக ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக கூறி உதவி கேட்டுள்ளார். உடனடியாக அங்கிருந்த 8 பேரின் விவரங்களை கேட்டு, அவர்களது ராணுவ அதிகாரிக்கு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் இ-மெயில் அனுப்பி, தமிழக ராணுவவீர்கள் 8 பேரை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அதன்பேரில், 30 நாட்களாக ஊர் திரும்ப முடியாமல் தவித்த ஓய்வுபெற்ற 8 ராணுவவீரர்களும் சொந்த ஊருக்கு திரும்பினர்.

தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களது தொகுதி எம்எல்ஏ, எம்பிக்களிடம் உதவி கேட்டும் கிடைக்காமல் தவித்தபோது, அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் செய்த உடனடி உதவியால் சொந்த ஊர் திரும்பியவுடன் 8பேரும் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்தனர்.


Tags : soldiers ,Telangana ,Army veterans ,city ,home ,MLA , Telangana, Military, Anaicut mla
× RELATED ஸ்ரீநகரில் பரபரப்பான பகுதியில்...