×

ஊரடங்கு உத்தரவால் தெளிந்த நீரோடையாக மாறியது தாமிரபரணி

வி.கே.புரம்: ‘கொரோனா’ ஊரடங்கு உத்தரவு காரணமாக வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆறு தூய்மையாக காட்சியளிக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி ஆறு, 130 கிமீ தூரம் பயணம் செய்து புன்னக்காயலில் கடலில் கலக்கிறது. தாமிரபரணி மூலம் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 86 ஆயிரத்து 107 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடந்து வருகிறது. இதுதவிர நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 36 டவுன் பஞ்சாயத்துகள், 828 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக தாமிரபரணி விளங்குகிறது. தெளிந்த நீரோடையாக கண்ணாடிபோல் காட்சியளித்த தாமிரபரணி ஆற்றில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதால் தண்ணீர், கருப்பு நிறத்தில் கலங்கலாக மாறியது. குறிப்பாக தாமிரபரணி துவங்கும் இடமான பாபநாசத்திலேயே கழிவுகள் கலந்தன. பரிகாரம் என்ற பெயரில் சிலர், ஆற்றில் துணிகளை விட்டு அசுத்தம் செய்து வந்தனர். ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில், தாமிரபரணி கரையோரத்தில் தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. வி.கே.புரம் நகராட்சி சார்பில், பாபநாசத்தில் ஆற்றில் தேங்கிய துணிகள் அவ்வப்போது அகற்றப்பட்டன.

சமீபத்தில் பாபநாசத்தில் பசுமை தீர்ப்பாய நீதிபதி, கலெக்டர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டு தாமிரபரணியை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என்று ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தாமிரபரணி நதி தூய்மையாக காட்சியளிக்கிறது. போக்குவரத்து நிறுத்தம், ஆற்றில் குளிக்க தடை உள்ளிட்ட காரணங்களால் பாபநாசம் தாமிரபரணியில் யாரும் குளிக்க வருவதில்லை. பரிகாரம் உள்ளிட்ட நிகழ்வுகளும் நடைபெறவில்லை. இதன் காரணமாக பாபநாசம் தாமிரபரணி ஆறு, கழிவுகள் கலக்காமல் தெளிந்த நீரோடையாக காட்சியளிக்கிறது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் மட்டும் தடையை மீறி மக்கள் நீராடுவது தொடருகிறது. இருப்பினும் பல பகுதிகளில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வற்றாத ஜீவநதி தூய்மையாக காட்சியளிக்கிறது.  


Tags : stream ,Barani , Copper Barani, clear stream , curfew
× RELATED விமானத்தில் பயணம் செய்த மாநகராட்சி பள்ளி மாணவர்கள்