×

சூறாவளி காற்றுக்கு 5 ஆயிரம் பப்பாளி மரங்கள் சேதம்

உடுமலை: உடுமலையில் சூறாவளி காற்றுக்கு 5 ஆயிரம் பப்பாளி மரங்கள் சேதமடைந்தன. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குடிமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட கொள்ளுப்பாளையம் பகுதியில் சின்னத்துரை என்ற விவசாயி தனது 4 ஏக்கர்  விளைநிலத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் பப்பாளி பயிரிட்டிருந்தார்.  இவற்றில் சுமார் 5 ஆயிரம் மரங்கள் நன்கு வளர்ந்து அவற்றில் 6 கிலோ முதல் 10  கிலோ எடையிலான காய்கள் கொத்து, கொத்தாக காய்த்து தொங்கி கொண்டிருந்தன. இந்நிலையில் நேற்று உடுமலை சுற்றுவட்டாரங்களில் சாரல்மழை பெய்தது. இந்த மழையின் போது சூறாவளி காற்றும் வீசியது.

பயங்கரமாக வீசிய காற்றில் கொள்ளுப்பாளையம் பகுதியில் விளைந்திருந்த பப்பாளி மரங்கள் அனைத்தும் முறிந்து விழுந்தது. இதனால் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பப்பாளிகள் சேதம் அடைந்தது. இதுகுறித்து விவசாயி சின்னத்துரை கூறியதாவது: ஒரு வருடமாக பிள்ளையை போல ஒவ்வொரு மரத்தையும் பார்த்து, பார்த்து வளர்த்து  வந்தேன். அனைத்து மரங்களிலும் 2 கிலோ முதல் 10 கிலோ எடை வரையிலான காய்கள்  காய்த்து தொங்கி கொண்டிருந்தன. ஒரு சில மரங்களில் 60 காய்கள் வரை காய்த்திருந்தது. ஒரு மாதத்தில் அறுவடை சீசன் துவங்க இருந்தது. தற்போது கிலோ ரூ.6 முதல் ரூ.8 வரை கொள்முதல் செய்து வந்தனர்.

இந்நிலையில் சூறைக்காற்றுக்கு தோட்டத்தில் இருந்த அனைத்து மரங்களும்  முறிந்து விழுந்து சேதமானது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் பலன் தரக் கூடிய இம்மரங்களால் சுமார் ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்க முடியும். ஆனால் ஒரே  நாளில் எல்லா கனவுகளும் தகர்ந்து விட்டன. இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட இந்த இழப்பு குறித்து தோட்டக்கலைத்துறைக்கு தெரிவித்துள்ளேன். தமிழக அரசு பாதிக்கப்பட்ட பப்பாளி தோட்டத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை  விடுத்தார்.

Tags : Hurricane winds, papaya trees, damage
× RELATED இந்திய – இலங்கை கடல் எல்லையில்...