×

சிகிச்சையில் இருந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பினர், கொரோனா இல்லாத மாவட்டமானது தேனி

* பாதிப்பு இல்லாமல் தொடர்வது மக்கள் கையில் உள்ளது என டாக்டர்கள் உருக்கம்

ஆண்டிபட்டி / தேனி: தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து நேற்று 5 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து அவர்களது வீடுகளுக்குச் சென்றனர். இங்கு சிகிச்சை பெற்ற அனைத்து கொரோனா நோயாளிகளும் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தேனி மாறியுள்ளது. கொரோனா நோய் தொற்றால் தேனி மாவட்டத்தில் 43 பேர் பாதிக்கப்பட்டு, அதில் ஒருவர் இறந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 42 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து படிப்படியாக வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த 37 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 5 பேர் மட்டும் தொடர்ந்து சிகிச்சையிலிருந்தனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரிந்தது.  இதனையடுத்து நேற்று மீண்டும் அவர்களுக்கு சோதனை செய்யப்பட்டது. இதிலும் கொரோனா பாதிப்பு இல்லை என உறுதியானதையடுத்து 5 பேரும் நேற்று மருத்துவமனையில் இருந்து கார்கள் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு வழக்கம்போல பூ, பழங்கள், பிஸ்கட்டுகள் மற்றும் தொடர் மருந்து கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன், துணைமுதல்வர் எழிலரசன், நிலைய மருத்துவ அலுவலர் சிவக்குமரன், துணை நிலைய மருத்துவ அலுவலர் ஈஸ்வரன் மற்றும் மருத்துவர்கள் கைதட்டி மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தனர். மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் இளங்கோவன் கூறுகையில், ‘‘தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதித்த நிலையில் சிகிச்சையிலிருந்த அனைவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இதனால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தேனி மாறியுள்ளது. கடந்த 17ம் தேதிக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் இன்னும் இருப்பதால், தேனி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக தொடர்வது மக்கள் கையில் தான் உள்ளது. அரசு வழிகாட்டுதலின்படி மக்கள் விழிப்புடன் இருந்தால் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக தேனி தொடரும்’’ என்றார்.

‘ஆரஞ்ச்’ ஆனது தேனி
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43 பேரை எட்டியதும் தேனி மாவட்டத்தை மத்திய அரசு, கொரோனா பாதிப்பின் சிவப்பு மண்டலமாக அறிவித்தது. ஒருவர் உயிரிழக்க, 42 பேர் கொரோனா பாதிப்பில், தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 37 பேர் நேற்று முன்தினம் வரை முழு குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதிப்பில் தேனி மாவட்டத்தை ரெட் ஜோனில் இருந்து விடுவித்து ஆரஞ்சு கோனாக மத்திய அரசு அறிவித்தது.

ஆரஞ்சு ஜோனாக அறிவித்த நிலையில் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த எஞ்சிய 5 பேரும் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனையடுத்து தற்போது தேனி மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளே இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது, நேற்று டிஸ்சார்ஜ் ஆகி செல்லும் 5 பேரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர். வருகிற 14 நாட்களில் வைரஸ் தொற்று யாருக்கும் இல்லை என்ற நிலை தொடரும்போது, தேனி மாவட்டம் ஆரஞ்ச் ேஜானில் இருந்து பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

Tags : home , treated ,cured , returned home
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு