×

கொரோனா மெயின்ரோட்டுல வந்தாலும் அதை குறுக்கு சந்துல போய் பிடிக்கலாமாம்: ஆய்வாளர்கள் அசத்தல் முயற்சி

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது எந்த அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதை தடுக்க பெரிய அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுவரை இந்தியாவில், 9.02 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களில், ஒரு நாளைக்கு சராசரியாக 49,800 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 8 நாட்களில் சோதனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது. மார்ச் 23 முதல் ஏப்ரல் 22 வரை சுமார் ஐந்து லட்சம் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. ஆனாலும் நோய் பரவுவதைக் கணக்கிட இது இன்னும் போதுமானதாக இல்லை.

‘‘தற்போதுள்ள பரிசோதனை முறை, கொரோனா பாதிப்பை துல்லியமாக கணக்கிட போதுமானதாக இல்லை. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சிலர் இருந்தாலும், அதைக் கண்டறிய 3 முதல் 15 நாட்கள் ஆகும். அது மிகவும் தாமதமானது. அதனால்தான், கழிவு நீரில் கொரோனா வைரஸ் மரபணு பொருள் இருக்கிறதா என்பதை சரிபார்க்க கழிவுநீரைப் பயன்படுத்துவது எப்படி என்று நாங்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம் . சமூகங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கண்காணிக்க கழிவுநீர் தொற்றுநோய் ஓர் மதிப்புமிக்க கருவியாகும்’’ என்று காந்திநகர் ஐஐடியின் புவி அறிவியல் துறை பேராசிரியர் மணீஷ் குமார் கூறினார்.

அமெரிக்காவின் நோட்ரே டேம் பல்கலைக்கழகத்தின் கேல் ஜேம்ஸ் பைபி தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கழிவுநீரை அடிப்படையாகக் கொண்ட தொற்றுநோயியல் (WBE) உலகளாவிய ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, சிறுநீர், மலத்திலுள்ள நுண்ணுயிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் லேசான அறிகுறி அல்லது அறிகுறியே இல்லாதவர்களை கூட கண்டறிந்து வைரஸ் பரவலை தடுக்க முடியும். மனித உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர், மலம் ஆகியவற்றில் கலந்துள்ள வைரஸில் ஆர்.என்.ஏக்களின் அளவை கண்டறிந்து, வைரஸ் தொற்றையும் உறுதி செய்யலாம். கழிவுநீரிலுள்ள நுண்ணுயிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்களில் தோராயமாக எவ்வளவு பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதனையும் அறியலாம்.

தொற்று ஏற்பட்ட 3ஆவது நாளிலேயே மனித உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளிலுள்ள நுண்ணுயிரிகள் மூலம் அதனை கண்டறியலாம். இந்தியாவில் போலியோவை கண்டறிய இதே கழிவுநீர் கண்காணிப்பு நடைமுறை பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதே முறையை கொரோனா விவகாரத்திலும் செயல்படுத்தி போலியோவைப் போலவே கொரோனா வைரசையும் முழுமையாக ஒழித்து கட்டலாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags : Corona ,mainland ,crossroads ,Analysts , Corona, inspectors, curfew
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...