×

ஜிப்மருக்கு தந்தையுடன் சிகிச்சைக்காக வந்த புற்றுநோய் பாதித்த சேலம் சிறுவனை பாதுகாப்பாக அனுப்பி வைத்த போலீசார்

புதுச்சேரி: சேலம் மாவட்டம் பச்சைமலை பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (45). இவரது மனைவி காந்தி. இவர்களுக்கு மோனிஷ் குமார் என்ற 5 வயதில் மகன் உள்ளான். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன், கடந்த 2 ஆண்டாக அவதிப்பட்டு வருகிறான். இதற்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் ஏற்கனவே சிகிச்சை பெற்றுள்ளான். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன், மோனிஷ்குமாருக்கு திடீரென உடல்நிலை மோசமானது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

நேற்று முன்தினம் மதியம் மாலை ஜிப்மரில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சிறுவனை காப்பாற்றுவது சிரமம், இருப்பினும் அறுவை சிகிச்சை செய்தால் வாய்ப்புள்ளது, அடுத்த மாதம் வருமாறு கூறி டாக்டர்கள் நேற்று மதியம் அனுப்பி விட்டனர். கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கும் நிலையில், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும், கையில் போதிய பணம் இல்லாமலும் ரவீந்திரன் தனது மகனுடன் தவித்தார். சரி நடந்தே செல்லலாம், செல்லும் வழியில் ஏதாவது வாகனம் வந்தால் ஏறி விடலாம் என முடிவு எடுத்து, ரவீந்திரன் நடந்தே புறப்பட்டார்.

3 கி.மீ தூரம் புதுவை இந்திராகாந்தி சிக்னல் அருகே சென்ற மகனால் அதன்பிறகு செல்ல முடியவில்லை. அங்குள்ள பெட்ரோல் பங்கில் இருவரும் அமர்ந்து விட்டனர். அப்போது சிறுவனுடன் நீண்ட நேரம் ஒருவர் இருப்பதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து உருளையன்பேட்டை போலீசார் விசாரித்தனர்.அப்போது ரவீந்திரன் நடந்த சம்பவத்தை கூறவே, உடனே போலீசார், இருவரையும் புதுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு கலெக்டர் இல்லாததால், துணை தாசில்தார் செந்தில்குமாரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் கலெக்டர் அருணுக்கு தெரிவித்தார்.

இதையடுத்து அவர், சிறுவனுடன் ரவீந்திரன் ஊருக்கு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்தார். ஒரு காரை ஏற்பாடு செய்து, இருவரையும் அனுப்பி வைத்தனர். இதற்கான செலவை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், போலீசார் ஏற்றனர். மேலும், செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினர்.

Tags : Salem , Jibmer had a father, a cancer, a Salem boy, police
× RELATED தேர்தலில் அதிமுக பின்னடைவு எடப்பாடி...