×

37 நாட்களாக வாழ்வாதாரம் பாதித்துள்ள பீடித் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து பீடி சுற்ற அனுமதி: நெல்லை கலெக்டர் தகவல்

நெல்லை: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 37 நாட்களாக வாழ்வாதாரம் பாதித்துள்ள பீடித் தொழிலாளர்கள் வீட்டில் இருந்து பீடி சுற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பீடித் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் பீடி கம்பெனிகளில் இருந்து இலை, தூள் வாங்கி வந்து வீடுகளில் வைத்து பீடி சுற்றி வழங்குவது வழக்கம். இதன் மூலம் குறைந்த கூலி பெற்று வந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பீடி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் அடித்தட்டு தொழிலாளர்களான பீடித் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு கொடுத்த ரூ.1000, அரிசி, பருப்பும் தீர்ந்து விட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பீடித் தொழிலாளர்கள் வறுமையில் வாடி வருகின்றனர். எனவே பீடி தொழிலாளர்கள் உயிர் வாழ்ந்திட ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி கடந்த 27ம் தேதி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அவரவர் வீட்டு முன்பு தெருவில் இறங்கி போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் பீடித் தொழிலாளர்களின் பிரச்னை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சிஐடியூ பீடி சங்க நிர்வாகிகளிடம் உறுதி அளித்தனர். இதனால் பீடித் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் வீட்டிலிருந்து உற்பத்தி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுபடுத்துதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வு மேற்கொள்ளல் குறித்து தமிழக முதல்வர் வீடியோ கான்பரன்சிங் முறையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கடந்த 29ம் தேதி ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல்  தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும், 9 கண்காணிப்பு வளைய பகுதிகளில் கண்காணிப்பு பணி குறித்தும் விளக்கப்பட்டது. அங்கு கிருமி நாசினி தெளித்தும், தனித்திருக்கும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மளிகை பொருட்கள் தடையின்றி வழங்கப்படுவது குறித்தும்,  மருத்துவ சிகிச்சை குறித்தும், கொரோனா தொற்றால்  பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், செவிலியர்களுக்கு முதல்வரின் உத்தரவிற்கிணங்க  உணவு மற்றும் வசிப்பிடம் வழங்கப்படுவது குறித்தும் கலெக்டர் ஷில்பா விளக்கம் அளித்தார்.

மேலும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், ஏர்வாடி, களக்காடு ஆகிய பகுதிகளில் ஏழை, எளிய மக்களின் பிரதான தொழிலான பீடி சுற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பீடி தொழில் நிறுவனங்கள் மூலப்பொட்களை தொழிலாளர்கள்  வீடுகளுக்கு வழங்கி உற்பத்தி செய்ய வழிவகை செய்யுமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். இதன் மூலம் பீடித் தொழிலாளர்கள் உரிய பாதுாப்பு வசதிகளுடன் வீட்டில் இருந்தே பீடி சுற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் நெல்லை பகுதியைச் சேர்ந்த  16ஆயிரத்து 514 பேர், அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த 3ஆயிரத்து 604 பேர், சேரன்மகாதேவி பகுதியை சேர்ந்த 37ஆயிரத்து 973 பேர் உள்ளிட்ட 12 ஆயிரத்து 388 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 2 லட்சத்து 38 ஆயிரத்து 776 பெண்கள் என 2 லட்சத்து 51 ஆயிரத்து 164 பீடி சுற்றும் தொழிலாளர்கள் பயன் பெறுவர். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags : beedi workers ,home ,Beedi ,homes ,Paddy Collector , Permits, beedi workers, swept, homes , 37 days: Paddy Collector
× RELATED காயல்பட்டினம் கடற்கரையில் இருந்து...