×

ராகுல் - ரகுராம் ராஜன் அசத்தல் விவாதம்: ஊரடங்கு தளர்த்துவதில் புத்திசாலித்தனம் வேண்டும்

புதுடெல்லி: ‘‘ஊரடங்கை தளர்த்துவதில் இந்தியா புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். இங்கு நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு உணவளிக்கும் திறன் இல்லை என்பதால், விரைவில் பொருளாதார நடவடிக்கைகளை குறிப்பிட்ட அளவுக்கு தளர்த்த வேண்டும்’’ என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறி உள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாகவும், பொருளாதாரத்தில் அதன் தாக்கம், ஊரடங்குக்குப் பிறகு எடுக்க வேண்டிய பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு துறை நிபுணர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட உள்ளார்.

இதன் முதல் நிகழ்ச்சி காங்கிரசின் அனைத்து சமூக வலைதளங்களிலும் நேற்று வெளியிடப்பட்டது. இதில், ராகுல் காந்தி, முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுடன் நேர்க்காணல் நடத்தினார். ராகுல் கேட்ட கேள்விகளுக்கு ரகுமான் ராஜன் அளித்த பதிலில் கூறியதாவது: கொரோனா தொற்று நோய் பரவியிருக்கும் தற்போது சூழலில் இந்தியாவில் ஏழை மக்களுக்கு உதவ ரூ.65,000 கோடி தேவை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கருத்தில் கொண்டு அதை செய்ய முடியும். ஊரடங்கை தளர்த்துவதில் புத்திசாலித்தனம் வேண்டும். குறிப்பிட்ட அளவில் படிப்படியாக ஊரடங்கை தளர்த்த வேண்டும். அதே சமயம், முடிந்தவரை மக்கள் விரைவாக வேலைகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில், ஒப்பீட்டளவில் இந்தியா ஏழை நாடாக இருப்பதால் நீண்ட காலத்திற்கு உணவளிக்க முடியாது. அவர்களாலும் நீண்ட காலத்திற்கு ஊரடங்கை தாங்கிக் கொள்ள முடியாது. எப்போதுமே ஊரடங்கை நீட்டிப்பது எளிதானதுதான். ஆனால், பொருளாதாரத்திற்கு நிலையாக இருக்காது.
இவ்வாறு ரகுராம் ராஜன் கூறினார். ‘‘இங்கு சில நல்ல விஷயங்கள் மக்களை இணைக்கின்றன, பல வாய்ப்புகளை அளிக்கின்றன. ஆனால் பிளவும், வெறுப்புணர்வும் மக்களை துண்டிக்கிறதே. இவை மிகப்பெரிய சவாலாக உள்ளது’’ என ராகுல் கூறினார்.

அதை ஏற்றுக் கொண்ட ரகுராம் ராஜன், ‘‘சமூக நல்லிணக்கமே பொது நன்மை பயக்கும். அதையே நம்பும் மக்களும் இருக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற மிகப்பெரிய சவால் இருக்கும் சமயத்தில், பிளவுபட்ட வீடாக இந்தியா இருக்க முடியாது’’ என்றார்.Tags : Rahul ,Raghuram Rajan , Rahul, - Raghuram Rajan, curfew
× RELATED ஆண்டிப்பட்டியில் நாளை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு