×

மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை கண்டித்து டெல்டாவில் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டம்: நகல் எரித்து எதிர்ப்பு; 3 பேர் மீது வழக்கு

நாகை:  ஜல்சக்தி அமைச்சகத்தின்கீழ் காவிரி மேலாண்மை வாரியம் செயல்படும் என்று  மத்திய அரசு வெளியிட்ட அரசாணையை கண்டித்து டெல்டாவில் விவசாயிகள் கருப்புக்கொடி நட்டு போராட்டம் நடத்தினர்.  மத்திய அரசு ஜல்சக்தி துறையின் கட்டுப்பாட்டின்கீழ் காவிரி மேலாண்மை வாரியத்தை கொண்டு வருவதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் விரக்தியடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்திய அரசு உடனே இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். தமிழகத்தை பாலைவனமாக்கும் இந்த புதிய உத்தரவை திரும்ப பெறாவிட்டால் ஊரடங்கு உத்தரவையும் மீறி கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்தனர்.

அதன்படி நாகை அருகே செல்லூர் கிராமத்தில் பருத்தி நடவு செய்திருந்த வயலில் நேற்று காலை கருப்புக்கொடியை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், புதிய அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
நகல் எரித்து போராட்டம்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான விவசாயிகள் மத்திய அரசின் அரசாணையை தீயிட்டு கொளுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அனுமதியின்றி மத்திய அரசின் அரசாணையை தீயிட்டு கொளுத்தியதாக பி.ஆர்.பாண்டியன் (55), மாவட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார் (51), ஒன்றிய செயலாளர் மனோகரன் (56) ஆகியோர் மீது 3 பிரிவுகளின் மீது மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ‘கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு துணை போகும் வகையில் கொரோனா பரவல் ஊரடங்கை பயன்படுத்தி, தமிழகம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்கும் நோக்கத்தில், அரசாணை வெளியிட்டுள்ளது கண்டனத்துக்குரியது’ என்றார்.



Tags : Case ,protest ,Delta , Federal Government, Delta, Farmers, Black Crowd Struggle, Case
× RELATED பாலியல் வழக்கு: ரேவண்ணா ஆதரவாளர் கைது