×

கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பு: முதலிடத்தை நோக்கி திருவிக நகர் மண்டலம்

பெரம்பூர்: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராயபுரம் மண்டலம் முதலிடத்திலும், தண்டையார்பேட்டை மண்டலம் 2வது இடத்திலும், திருவிக நகர் 3வது இடத்திலும் இருந்தன. ஆனால், தற்போது திருவிக நகர் மண்டலம் 169 நபர்களுடன் 2வது இடத்திலும், ராயபுரம் மண்டலம் 189 நபர்களுடன் முதல் இடத்திலும் உள்ளன.திருவிக நகர் மண்டலத்தில் 64வது வார்டு முதல் 78வது வார்டு வரை 15 வார்டுகள் உள்ளன. இங்கு புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ஆகிய பகுதிகளில் நெருக்கடியான பகுதியாகும். இங்கு சமூக இடைவெளியை பெரும்பாலானோர் கடைபிடிக்காததால் ஒவ்வொரு நாளும் புளியந்தோப்பில் 20க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சமீப காலமாக சுகாதாரத்துறை பணியாளர், தூய்மை பணியாளர், மாநகராட்சி  கணக்கெடுப்பாளர், மருத்துவர், வங்கி ஊழியர், காவலர், தீயணைப்பு வீரர் என  பலர் இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. திருவிக நகர் மண்டலத்தை பொறுத்தவரை சுகாதார ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. 15 சுகாதார ஆய்வாளர்களுக்கு தற்போது 11 பேர் மட்டுமே உள்ளனர். கிருமி நாசினி தெளிப்பவர்கள் முதல் கணக்கெடுப்பாளர் வரை ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. புளியந்தோப்பு சரகத்தில் காவலர்கள் பற்றாக்குறையால் போதிய அளவில் முழுவீச்சில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. மேலும் உளவுதுறையினர் தரும் தகவல்களை உயர் அதிகாரிகள் கவனத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருப்பதும் ஓர் முக்கிய காரணமாக கூறபடுகிறது.

இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பலரும் தொடர் பரிசோதனை செய்து, முடிவுக்காக காத்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அதனால் மண்டல அளவில் திருவிக நகர் மண்டலம் முதல் இடத்தை நோக்கி செல்லும் நிலை உள்ளது.  எனவே, மாநகராட்சி ஆணையர் உடனடியாக திருவிக நகர் மற்றும் ராயபுரம் மண்டலத்திற்கு தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து, அவர்களது மேற்பார்வையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ள வேண்டும். காவல்துறையில்  கூடுதலாக ஆட்களை நியமித்து முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குழந்தை உட்பட 39 பேர் பாதிப்பு
சென்னை திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியை சேர்ந்த 56 வயது துப்பரவு பணியாளர், ஒரே குடும்பத்தை சேர்ந்த 40 வயது தாய், 26 வயது மருமகள், 2 மாத குழந்தை, 45 வயது பெண், 42 வயது டாஸ்மாக் கடை ஊழியர், 34 வயது எலக்ட்ரீஷியன், நரசிம்ம நகரை சேர்ந்த 20 வயது பெண் உட்பட 30 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஓட்டேரி கோவிந்தன் தெருவை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் குழந்தை பெற்றெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டேரி பிரிக்கிளின் சாலையில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் நேற்று ஒரே நாளில் திருவிக நகர் மண்டலத்தில் மட்டும் 39 பேருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.



Tags : region ,Trivik Nagar ,Corona , Corona, Trivik Nagar, curfew
× RELATED இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்!