×

சொமேட்டோ, டன்சோ நிறுவனத்தை தொடர்ந்து ஸ்விக்கியுடன் கைகோர்க்கும் ஆவின்: பால் மற்றும் பால்பொருட்களைப் நேரடியாக வழங்க ஏற்பாடு

சென்னை: பொதுமக்கள் ஸ்விக்கி மூலமாகவும் நேரடியாகப் பால் மற்றும் பால்பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என ஆவின் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஆவின் நிறுவனம் 4.60 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு 31.50 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 24.50 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. ஆவின் நிறுவனம் வெண்ணெய், நெய், பால்கோவா, நறுமணப் பால், ஐஸ்கிரீம் போன்ற பால் உபபொருட்களை சென்னை மாநகரில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது. இதில் 21 பாலகங்கள் குளிர்சாதன வசதி, சிறுவர் விளையாட்டுப் பூங்கா, வைஃபை வசதி போன்ற வசதிகளுடன் அதிநவீனப் பாலகங்களாக இயங்கி வருகின்றன.

தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அதிநவீனப் பாலகங்களின் மூலம் நுகர்வோர் இல்லங்களுக்கு பால் மற்றும் பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக சொமேட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டு அதை சென்னையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்தச் சேவை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் ஸ்விக்கி மூலமாகவும் நேரடியாகப் பால் மற்றும் பால்பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நுகர்வோர் இல்லங்களுக்குப் பால் மற்றும் பால்பொருட்கள் வழங்குவதற்காக சொமேட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனம் இணைந்து சேவை செய்ய ஒப்பந்தம் செய்து அதைச் சென்னையில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஸ்விக்கி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஊரடங்கு நிலவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு எந்தச் சிரமமும் இன்றிப் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாக இயக்குநர் வள்ளலார் தெரிவித்துள்ளார்.

Tags : Soweto ,Zwicky ,Sovato , Somato, Danzo, Zwicki, Avin
× RELATED ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து ஒன்றிய...