×

சென்னையில் இருந்து இந்த மாதம் மட்டும் 39 சிறப்பு விமானங்கள் மூலம் 5,489 வெளிநாட்டினர் பயணம்

சென்னை: கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் வசிக்கும் வெளிநாட்டவர்கள், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி கற்க வந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் அந்தந்த நாட்டு தூதரகங்களின் உதவிகளுடன் தனி விமானங்களில் தங்கள் நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றனர். தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வசிக்கும் வெளிநாட்டவர்களும் சென்னையிலிருந்து தனி விமானங்களில் தங்கள் நாடுகளுக்கு திரும்புகின்றனர். இந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை 38 தனி விமானங்களில் 5,248 பேர் தங்கள் நாடுகளுக்கு திரும்பினர். இவர்களில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மன், ஆஸ்திரேலியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், வங்கதேசம், பூடான், கொரியா, கத்தார் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

இதில் 26 விமானங்கள் சென்னையிலிருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு சென்றன. 8 விமானங்கள் சென்னையிலிருந்து மும்பை, டில்லி, ஐதராபாத் வழியாக அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றவை.  2 ஆம்புலன்ஸ் தனி விமானங்கள் சென்னையிலிருந்து துபாய், ஜெர்மன் நாடுகளுக்கு 11 பேருடன் சென்றன.
இந்நிலையில், 39வது தனி விமானம் சென்னையிலிருந்து தோகா வழியாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு நேற்று மாலை புறப்பட்டுச் சென்றது. இதில் 241 ஆஸ்திரேலியர்கள் சென்றனர். இவர்களில் 96 ஆண்கள், 100 பெண்கள், சிறுவர், குழந்தைகள் 45 பேர். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள்.

ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஏற்பாட்டில் இவர்கள் அனைவரும் நேற்று காலை 10 மணியிலிருந்தே  சிறப்பு வாகனங்களில் படி    ப்படியாக  சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த விமானம், நேற்று மாலை 3.25 மணிக்கு சென்னையிலிருந்து தோகா வழியாக ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு  புறப்பட்டுச் சென்றது.


Tags : flights ,foreigners ,Chennai , Chennai, special flights, corona virus
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...