×

கொரோனா வைரஸ் பீதி; கோயம்பேடு மார்க்கெட் மூடல் விழா சீசனில் 800, 1000க்கு எகிறிய 1 கிலோ மல்லிகை 10க்கு விற்பனை: கூப்பிட்டு கொடுத்தாலும் வாங்க ஆளில்லை

சென்னை: கோயம்பேடு பூ மார்க்கெட் இல்லாததாலும், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதாலும் விழா சீசன்களில் கிலோ ரூ.800, 1000க்கு விற்பனையான மல்லிகைப்பூ கிலோ ரூ.10க்கு விற்பனையாகிறது. அதையும் வாங்க ஆளில்லாததால் விவசாயிகள் கடும் வேதனைக்குள்ளாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் முதல் ஐடி கம்பெனிகள் வரை அனைத்தும் முடங்கி கிடக்கின்றன. ஏழை எளியவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைக்காக அவ்வப்போது கடைகளை திறந்தாலும் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இது, ஒருபக்கம் ஒன்றால், விவசாயிகள் தங்களது விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பூக்கள், காய்கறிகள், தர்பூசணி, முலாம் பழங்கள் விவசாய நிலங்களிலேயே அழுகி வீணாகி வருவதாக விவசாயிகள் குமுறுகின்றனர். பண்டிகை, திருமண சீசன்களில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.800, 1000 வரை விற்பனையாகும். இதுபோல மற்ற பூக்களின் விலையும் கணிசமாக அதிகரிக்கும். இந்நிலையில், பெரியபாளையம் அருகே ஆத்துப்பாக்கம் கிராமத்தில், தற்போது மல்லிகை அதிக அளவு விளைந்துள்ளது. ஆனால், சென்னையில் கடந்த 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், தற்போது  பூ மார்க்கெட், மாதவரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால், விவசாயிகள் பூக்களை விற்பனை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல முடியாததால், பூக்களை கிலோ 10க்கு கிராமத்திலேயே விற்பனை செய்து வருகிறார்கள். இதனால், அவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த பூக்களையும் கூட வாங்க ஆளில்லை என்கின்றனர். இதுகுறித்து ஆத்துப்பாக்கம் விவசாயிகள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் இந்த மாதத்தில் எப்போதுமே பூக்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும். இந்த மாதம் திருமணங்கள் அதிகமாக நடப்பதால் பூக்களின் விற்பனை அதிகரிக்கும்.

ஆனால், கொரோனா தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பூக்களின் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. தற்போது, மாதவரத்திற்கு பூ மார்க்கெட் மாற்றப்பட்டுள்ளதால், அங்கு போக்குவரத்து போதுமானதாக இல்லை. இதனால், நாங்கள் கிராமத்திலேயே ஒரு கிலோ  மல்லிகை பூவை ₹10க்கு விற்பனை செய்கிறோம். அதையும் வாங்க ஆட்கள் இல்லை’ என்று வேதனை தெரிவித்தனர்.

Tags : Coimbatore ,market closing ceremony ,Closing Ceremony ,Coimbatore Market , Corona, Coimbatore Market, Jasmine
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...