×

சலூன் கடைக்காரருக்கு கொரோனா: முடிவெட்டிய 42 பேருக்கு பரிசோதனை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவரிடம் முடிவெட்டிய 42 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதிக்கு சீல் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர், சென்னை நெற்குன்றத்தில் தங்கி, கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு, கோயம்பேடு மார்க்கெட் ரோடு என 2 இடங்களில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

இவர், கடந்த மாதம் தனது சொந்த ஊருக்கு சென்றபோது அவரை ஒரு நாய் கடித்துள்ளது. அதனால், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடந்த 16ம் தேதி சென்னை திரும்பினார். பின்னர், வழக்கம் போல் சலூன் கடையில் முடிவெட்டும் வேலையில் ஈடுபட்டார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி இவருக்கு கடுமையான காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்தார். இதன் முடிவு கடந்த 25ம் தேதி வந்தது. அதில், அந்த வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

உடனே அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், இவர் தனது கடையில் சமீபத்தில் 42 பேருக்கு முடிவெட்டியது தெரிந்தது. இதனால், மேற்கண்ட அனைவரையும் தேடி பிடித்து, அவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவில்தான் எத்தனை பேருக்கு நோய் தொற்று உள்ளது என்பது தெரியவரும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

3 பேர் வீடு திரும்பினர்
செங்குன்றம் காமராஜர் நகர், வீரகாளியம்மன் கோயில் அண்ணா தெருவில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் அரசு பன்னோக்கு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இவர்கள் மூவரும் குணமாகி நேற்று வீடு திரும்பினர். இருப்பினும் அவர்கள் வசித்துவரும் பகுதி தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் கிருமிநாசினி தெளித்தனர். அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடைக்கு சீல்
சலூன் கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், நேற்று மாநகராட்சி அதிகாரிகள் அந்த கடை மற்றும் அந்த பகுதி முழுவதும் சீல் வைத்தனர். பின்னர், அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். பொதுமக்கள் யாரும் இந்த வழியில் செல்லக்கூடாது என எச்சரிக்கையும் விடுத்தனர்.

Tags : infants ,saloon shopkeeper , Saloon shopkeeper, Corona
× RELATED இங்கிலாந்தில் 7 பச்சிளங்குழந்தைகளை...