×

கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் பரபரப்பு: பிரசவத்தின்போது தாய், குழந்தை சாவு: டாக்டர்கள் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

சென்னை: கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாய் மற்றும் பிறந்த குழந்தை இறந்தனர். இதற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டை முக்கி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபா. தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பிரபாவின்  மனைவி லட்சுமி (27), நிறைமாத கர்பிணியாக இருந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பிரபா, மனைவியை பிரசவத்திற்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு லட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் லட்சுமிக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் தாய் லட்சுமி மயக்க நிலையை அடைந்தார். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை மற்றும் தாய் இறந்துவிட்டனர்.  இதை சற்றும் எதிர்பார்க்காத கணவர் பிரபா அதிர்ச்சியடைந்தார். மருத்துவர்களின் கவனக்குறைவாலேயே பிரசவத்தின் போது  தாய் மற்றும் குழந்தை இறந்ததாக லட்சுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

பின்னர் இதுகுறித்து திருவல்லிகேணி காவல் நிலையத்தில் லட்சுமியின் கணவர் புகார் அளித்தார். அதன்படி போலீசார் பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தை இறந்தது குறித்து பிரசவம் பார்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையே தாய் மற்றும் குழந்தை இறந்தது மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் என்று குற்றம்சாட்டி மருத்துவமனையில் உறவினர்கள் தகராறு செய்தனர். அப்போது போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருவர் உடலையும் உறவினர்கள் எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் திருவல்லிக்கேணியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Relatives ,doctors ,baby ,childbirth ,Kasturba Gandhi Hospital , Relatives blame doctors for giving birth at Kasturba Gandhi Hospital
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி