×

வளைகுடா, அண்டை நாடுகளில் இருந்து பிரியாணிக்கான பாஸ்மதிக்கு ஆர்டர் குவிந்தும் போக்குவரத்து தடையால் பாதிப்பு: ஏற்றுமதியாளர்கள் புலம்பல்

* ஊரடங்கு காரணமாக, அரிசியின் தேவை அதிகரித்ததால் தற்போது 10-15% வரை விலை உயர்ந்துள்ளது.
* ஊரடங்குக்கு முன்பாக பாஸ்மதி அரிசி கிலோ ரூ.60க்கு விற்றது, தற்போது ரூ.65 ஆக விலை அதிகரித்துள்ளது.
* தானியங்களை பெருமளவு உற்பத்தி செய்யும் மேற்கு வங்கத்தில் தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக 25-30 சதவீத அரிசி ஆலைகளே இயங்குவதால் உற்பத்தியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தா: ரம்ஜான் மாதத்தையொட்டி, வளைகுடா மற்றும் அண்டை நாடுகளில் இருந்து பிரியாணி அரிசிக்கான ஆர்டர்கள் குவிந்த போதிலும், கொரோனா காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்தையொட்டி, அண்டை நாடான வங்கதேசம், இந்தியாவிலிருந்து அதிகப்படியான பாஸ்மதி அரிசியை இறக்குமதி செய்வது வழக்கம். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து பாஸ்மதி அரிசியும், மேற்கு வங்கத்திலிருந்து புவிசார் குறியீடு பெற்ற நறுமண கோபிந்தோபாக் அரிசியும் வங்கதேசத்திற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படும்.

இந்நிலையில், தற்போது ரம்ஜான் மாதம் தொடங்கி உள்ள நிலையில் வங்கதேசம் மட்டுமின்றி வளைகுடா நாடுகளில் இருந்தும் பாஸ்மதி அரிசிக்கான ஆர்டர்கள் குவிந்துள்ளன. ஆனால், கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு லாரி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதால், அரிசி ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. ஏற்றுமதி நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘‘வங்கதேசத்திற்கு பாஸ்மதி அரிசியை ஏற்றுமதி செய்யும் நேரம் இது. அவர்கள் எப்போதும் மேற்கு வங்கத்திலிருந்து கோபிந்தோபாக் அரிசியை அதிகளவு வாங்குவார்கள். ஆனால் அண்டை நாடுகளுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ஏற்றுமதி முற்றிலும் நின்று விட்டது’’ என்கின்றனர்.

இதேபோல, இம்முறை வளைகுடா நாடுகளில் இருந்தும் குறிப்பாக சவுதி அரேபியாவிலிருந்தும் பெருமளவு ஆர்டர்கள் வந்துள்ளன. அரிசியை வழங்கும்பட்சத்தில் அவர்கள் உடனடியாக பணம் தரவும் தயாராக உள்ளனர்.  இது குறித்து அரியானாவை சேர்ந்த அரிசி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் கூறுகையில், ‘‘வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து பாஸ்மதி அரிசிக்கான ஆர்டர்கள் கடந்த ஒருவாரமாக அதிகரித்துள்ளது. கம்போடியாவில் இருந்தும் கணிசமான ஆர்டர் அதிகரித்துள்ளது. முதலில் பஞ்சாப், அரியானாவில் இருந்து குஜராத்தின் காண்ட்லா மற்றும் முந்த்ரா துறைமுகங்களுக்கு லாரி போக்குவரத்தில் சிக்கல் நிலவியது. தற்போது அது சரியாக இருந்தாலும், பேக்கேஜிங் பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : countries ,Gulf ,exporters ,passengers , Bay, neighbors, biryani, transport
× RELATED சுறா மீன் துடுப்புகள், கடல் அட்டைகள் தீவைத்து எரிப்பு