×

முழு ஊரடங்கு என்பதால் மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள்

* மாஸ்க் அணியவில்லை  * சமூக இடைவெளி இல்லை * கொரோனா அதிகரிக்கும் ஆபத்துசென்னை:  இன்று முழு ஊரடங்கு என்பதால் சென்னையில் உள்ள பல்வேறு மீன், இறைச்சி கடைகளில்  நேற்று மக்கள் கூட்டம் அலை மோதியது. தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு 10 மணி முதல் 26ம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் மருந்து, பால், பத்திரிகை விற்பனை கடைகளை தவிர்த்து மீதியுள்ள அனைத்து கடைகளும் மூடப்படுகிறது. மேலும், இறைச்சிகடைகள், மீன்கடைகள் இன்று மூடப்படும் என்பதால் காலை முதலே மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள்கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பட்டினப்பாக்கம், காசிமேடு, சிந்தாதிரிபேட்டை, வானகரம் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம் உள்பட பல மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளில் காலை முதலே மீன், இறைச்சி  வாங்க மக்கள் குவிந்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் சமூக இடைவேளி என்பது கேள்விக்குறியாக இருந்தது. சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டில் பொதுமக்களின் முழுகவனமும் பேரம் பேசி மீன் வாங்குவதிலேயே இருந்ததே தவிர, மாஸ்க், சமூக இடைவெளி  போன்றவற்றை மறந்தே போய் இருந்தனர். பலர் இருமிக் கொண்டும், தும்மிக் கொண்டும் இருப்பதை பார்க்க முடிந்தது. இன்னும் சிலர் மாஸ்க்குகளை மூக்கிற்கு பதிலாக கழுத்தில் தொங்கவிட்டிருந்தனர். மீன், இறைச்சி மார்க்கெட்டில் சமூக இடைவெளி என்கிற உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டதை பார்க்க முடிந்தது. சிந்தாதிரிபேட்டை மார்க்கெட்டில் பாதுகாப்புபணியில் இருந்த போலீசார் முகக்கவசம் அணிவது பற்றியும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து தொடர்ந்து அறிவுரை வழங்கிய வண்ணம் இருந்தனர். ஆனால், பொதுமக்கள் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை,. காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்கு நேற்று அதிகாலை முதலே கூட்டம் நிரம்பி வழிந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே திருவிழா போன்று காசிமேடு மீன்பிடி துறைமுகம் காட்சியளிக்கும். இன்று முழு ஊரடங்கு என்பதால் நேற்று காசிமேடு மீன் மார்க்கெட் திருவிழா போல காட்சி அளித்தது. பொதுமக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் பல கட்டுப்பாடுகளை விதித்தனர். இருந்தாலும் மக்கள் மீன் வாங்குவதிலேயே அதிக ஆர்வம் காட்டினர். முககவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் முண்டியடித்துக்கொண்டு மீன்களை வாங்கி சென்றனர்.வானகரம் மீன் மார்க்கெட் நேற்று அதிகாலை 4 மணிக்கே திறக்கப்பட்டது. இங்கும் அதிகளவில் பொது மக்கள் குவிந்து மீன் வாங்கினர். பலர் முககவசம் அணியவில்லை. சமூக இடைவெளியை பின்பற்றவில்லை. இதேபோல் கொளத்தூரில் உள்ள மீன்மார்க்கெட்டிலும் நேற்று பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று காலை முதலே சிக்கன் மற்றும் மட்டன் விற்பனை செய்யும் இறைச்சி கடைகளில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்றபடி இறைச்சிகளை வாங்கினார்கள். பல இடங்களில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது. இதே போன்று சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பொதுமக்கள் மீன் மற்றும் இறைச்சிகடைகளில் கூட்டம் கூட்டமாக சென்று வாங்கி சென்றனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் பொதுமக்களின் நடவடிக்கையால் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் கட்டுப்பாடுகளை கடுமையாக கடைபிடிக்க வேண்டும். மேலும், கொரோனா தொற்று குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது….

The post முழு ஊரடங்கு என்பதால் மீன், இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் appeared first on Dinakaran.

Tags : Alaimothy ,Corona ,Fish and Meat ,Dinakaran ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...